ஆரியர் வேதங்கள்
ந.சி. கந்தையா
1. ஆரியர் வேதங்கள்
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
ஆரியர் வேதங்கள்
ந.சி. கந்தையா
நூற்குறிப்பு
நூற்பெயர் : ஆரியர் வேதங்கள்
ஆசிரியர் : ந.சி. கந்தையா
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2003
தாள் : 16.0 கி. மேப்லித்தோ
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11 புள்ளி
பக்கம் : 20 + 164 = 184
படிகள் : 2000
விலை : உரு. 80
நூலாக்கம் : பாவாணர் கணினி
2, சிங்காரவேலர் தெரு,
தியாகராயர் நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : பிரேம்
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
20 அஜீஸ் முல்க் 5வது தெரு
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
கட்டமைப்பு : இயல்பு
வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
328/10 திவான்சாகிப் தோட்டம்,
டி.டி.கே. சாலை,
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.
‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’
என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.
அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.
இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.
பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.
தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.
திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-
திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.
பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.
“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”
வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.
அன்பன்
கோ. தேவராசன்
அகம் நுதலுதல்
உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.
உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.
தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.
தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.
எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.
இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.
எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.
வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.
உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.
இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.
சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.
அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.
உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.
நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.
அன்பன்
புலவர் த. ஆறுமுகன்
நூலறிமுகவுரை
திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.
இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.
திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.
இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.
ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:
சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்
58, 37ஆவது ஒழுங்கை,
கார்த்திகேசு சிவத்தம்பி
வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்
கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.
தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.
தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.
உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.
மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.
நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.
தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
பேரா. கு. அரசேந்திரன்
பதிப்புரை
வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.
இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.
ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.
தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.
தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.
தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.
நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.
வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.
ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?
தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.
மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.
இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிப்பகத்தார்
ஆரியர் வேதங்கள்
முன்னுரை
ஆரியர் தமிழரின் சமயம், ஆரியர் தமிழர், ஆரியம் தமிழ் என்பவைகளின் ஆராய்ச்சி, ஒரு கூட்டத்தவரின் வாழ்வைப் பாதிக்கின்றது. வேதங்கள் கடவுளாற் சொல்லப்பட்டவை; பிராமணர் பிரமாவின் முகத்திலிருந்து தோன்றினோர்; சமக்கிருதம் தேவர்கள் பேசும் மொழி; அம்மொழியில் சொல்லாதவைகளைத் தேவர் அறிந்து கொள்ள மாட்டார்கள்; ஆகவே மக்களின் எண்ணங்களைக் கடவுளருக்கு அவர் விளங்கக்கூடிய மொழியில் கூறுதல் வேண்டும். அவ்வாறு கடவுளர் எண்ணங்களைப் பொது மக்களுக்கும், பொதுமக்களின் எண்ணங்களைக் கடவுளுக்கும், உணர்த்து வோராகிய தாம் பூதேவர் என்பன போன்ற பொய்யான பொல்லாத கருத்துக் களை மக்களிடையே பரவச் செய்து, அவர்களின் அறியாமை மூலம் உலகில் மதிப்பும் நல்வாழ்வும் பெற்று வாழும் ஒரு கூட்டத்தினர், மேற்படி கருத்துக் களுக்கு மாறான ஆராய்ச்சிகளை வெளியிட விரும்ப மாட்டார்களல்லவா? ஆகவே அவர்களால் எழுதப்பட்ட, எழுதப்படும் நூல்களில் தமிழரின் உயர்வுகளைக் கூற வேண்டிய பகுதிகள் காணப்படுவதில்லை. அவர்களைப் பற்றிக் கூறவேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டால், அவர்கள் அரக்கர், இராக்கதர், பேய்கள், பைசாசுகள் எனக் கூறப்படுவர். இதனால் தென்னிந்திய மக்களைப் பற்றிய உண்மை வரலாறுகள் வெளிவராதிருந்தன.1
மேல்நாட்டவர்கள் தென்னிந்திய மக்களின் மேலான நாகரிகத்தை விளக்கிப் பல ஆராய்ச்சிகள் செய்துள்ளார்கள். மொகஞ்சதாரோ அரப்பா முதலிய தமிழரின் பழைய நகரங்களின் நாகரிகத்தைப் பற்றி மேல்நாட்டு வெளியீடுகளில் பல ஆராய்ச்சிகள் வெளிவந்துள்ளன. அவைகள் போன்றவை தமிழ்நாட்டில் வெளிவருவதில்லை. இதற்குக் காரணம், தமிழர் நாகரிகம் ஆரிய நாகரித்திற்கு முற்பட்டதென்றும், அந்நாகரிகத்தை அடிப் படையாகக் கொண்டே ஆரிய நாகரிகம் கட்டப்பட்டுள்ளது என்றும், பொது மக்கள் அறியின், அது ஒரு கூட்டத்தினரின் வாழ்வுக்குப் பங்கமாகு மென்பது பற்றி ஆகலாம்.
நாம், உண்மையான தமிழர். ஆரியர் வரலாறுகளைப் படிக்க வேண்டுமாயின் மேல்நாட்டறிஞரால் எழுதப்பட்டவைகளையே படித்தல் வேண்டும். மேல்நாட்டறிஞரால் எழுதப்படும் உண்மை ஆராய்ச்சிக்கும், பிராமண வகுப்பினரால் எழுதப்படும் ஆராய்ச்சிகளுக்கும் வேறு பாட்டைக் காணலாம். பின்னவரிடத்தில் தமிழரிலும் பார்க்க ஆரியர் நாகரிகத்திற் சிறந்தவர்கள்; அவர்களே தமிழருக்கு நாகரிகத்தைக் கற்பித்தவர்கள் எனக் கூறும் குறிக்கோள் இருப்பதை நாம் காணலாம்.1 ஆரிய வேதங்கள் என்னும் இச் சிறிய நூல், மேற்புல அறிஞர் பலர் வெளியிட்டுள்ள சிறந்த கருத்து களைத் துணைக்கொண்டு எழுதப்பட்ட தாகும். சிறுகுழந்தையும் ஒவ் வொன்றும் நியாயம் கேட்டு ஆராய்கின்ற காலம் இது; ஆகவே பொய்க் கதைகளை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கைகள் இனி நெருப்பின் முன்வைத்த வெண்ணெய் போலாகி விடுமென்பதில் சந்தேகமில்லை.
பிராமண ஆசிரியர்கள், இந்திய மக்கள் ஆராய்ச்சித்துறையில் இருப்பது எப்படி இருக்கிறதென்றால், தமிழருடைய உண்மை வரலாறு வெளி யில் வராதபடி, அவைகளை வடிகட்டி மறித்து ஆரியர் வரலாறுகளையே வெளியில் விடுவதற்கு இருப்பதுபோல வென்க.
சென்னை
1.1.1947
ந..சி. கந்தையா
ஆரிய வேதங்கள்
தோற்றுவாய்
நாம் தமிழர்; தமிழராகிய நாம் ஆரிய வேதங்களைப் பற்றியறிய வேண்டிய முக்கியம் யாது? எனப் பலர் வினாவலாம். நம்மவர் பலர் ஆரிய வேதங்களைப் பற்றி அறியார்; அவை கடவுளாற் செய்யப்பட்டவை என நம்பி வருகின்றனர். இன்று ஆலயங்களில் சொல்லப்படுவன கடவுள் வாக்காகிய வேதங்கள் என நம்பப்படுகின்றமையினாலேயே, வடமொழி சமய மொழியாகவும் தமிழ் நாட்டில் இடம்பெற்றுள்ளது. இது நம்மவர் அறியாமையின் விளைவாகும்.
சில ஆண்டுகளின்முன் திரு. கா. சுப்பிரமணியபிள்ளை அவர்கள், திருநான்மறை விளக்கம் என்னும் கட்டுரைவாயிலாக ஆரிய வேதங்கள் காலந்தோறும் மக்கள் பாடிய பாடல்களின் தொகுதிகள் என எடுத்து விளக்கு வாராயினர். அப்பொழுது நம்மவருள் ஒருவரே, வேதங்கள் கடவுளாற் செய்யப்பட்டவை எனக் கூறி முந்நூறு பக்கங்களுக்கு மேல் விரிந்த ஒரு புத்தகத்தை வெளியிடுவாராயினர். அதற்குப் பார்ப்பன வகுப்பினரின் ஒருவர் மதிப்புரையும் வழங்கியிருந்தார். வேதங்கள் கடவுளாற் செய்யப் பட்டன என்று நாட்டுவதற்கு அவ்வேத பாடல்களுள் ஒன்றேனும் அந்நூலில் எடுத்து ஆளப்படாதிருந்தமை இங்குக் குறிப்பிடத் தக்கது. இலங்கையில் வாழ்பவரும் பி.எஸ்ஸி. பட்டதாரியுமான, தமிழ்ப் பண்டிதருமாயுள்ள ஒரு வரும், வேதங்கள் கடவுளாற் சொல்லப்பட்டனவே என்று சில திங்கள் வெளி யீடுகளில் எழுதுவாராயினர். வட இலங்கையில் வாழ்பவரும் பி.ஏ. பட்டதாரி யும் தர்க்க நூல் வல்லாருமாகிய இன்னொருவர் வேதங்கள் கடவுளாற் செய்யப்பட்டன என்று முழங்கிய அளவில் நின்றுவிட்டது. யாகத்தில் வெட்டப்பட்ட விலங்குகள் உயிர்பெற் றெழுந்தன என்று கூறி கந்த புராணத் தினின்றும் ஒரு பிரமாணமும் எடுத்துக்காட்டியுள்ளார். ஆங்கிலமுந் தமிழும் ஒருங்கு பயின்ற பட்டதாரிகளே இவ்வாறு கூறுவார்களாயின் பொதுமக்க ளின் நிலைமை என்னாகும்? வேதம் கடவுளாற் செய்யப்பட்டது எனக் கூறுதல் நம்மவர் பலருக்குப் பழக்கமாக அமைந்துள்ளது. இப் பழக்கத்தை மாற்றுவது கடினமாயிருக்கின்றது. “பழக்கங் கொடிதுகாண்” என்றார் ஒழிவிலொடுக்க நூலுடை யாரும்.
ஆரிய வேதங்களிலுள்ள பாடல்களைச் செய்த புலவர்களின் (இருடிகள்) பெயர்கள் எல்லாம் காணப்படுகின்றன. புலவர்கள் பாடிய பாடல்கள், பாட்டின்நடை, பாடலில் துதிக்கப்பட்ட தெய்வம் முதலிய விவரங்கள் அடங்கிய நூல் வடமொழியில் உண்டு. அதற்கு அனுக்கிரமணி என்று பெயர்.1 ஆரிய வேதங்கள் ஒரு கூட்டத்தினருக்கு மாத்திரமே தெரிந் திருந்தன. மற்றவர்கள் அவைகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. மற்ற வர்கள் அவைகளை ஓதவோ, கேட்கவோ கூடாது என அவர்கள் சட்டம் செய்திருந்தார்கள். அதற்குக் காரணம் அவை கடவுளாற் செய்யப்பட்டிருத் தலும், அவை தேவர்கள் வழங்கும் தெய்வ மொழியில் உள்ளன வாதலும் என அக் கூட்டத்தினர் கூறுவாராயினர். அக்பர் காலத்திற்கூடப் பிராமணர் ஓதிவரும் வேதம் எவ்வகையினது என்று அறிய அவ்வரசன் முயன்று வந்தா னென்றும், அவனுக்கு அது கைகூடவில்லை என்றும் அறிகின்றோம்.
மேல்நாட்டவர் இந்திய நாட்டுக்கு வரத் தொடங்கினார்கள். இந்திய நாட்டின் பல பகுதிகள் ஆங்கிலர் ஆட்சிக்கு உட்பட்டன. அப்பொழுது வழக்கு களை விளங்கித் தீர்ப்பளிப்பதற்கு இந்திய நாட்டில் வழங்கும் சட்டங் களையும் தேச வழக்குகளையும் அறியும் கட்டாயம் ஆங்கில நீதிபதிகளுக்கு ஏற்பட்டது. 1773இல் வாரன் ஹேஸ்டிங்ஸ் என்பவர், வங்காளத்துக்குக் கவர்னர் bஜனரல் ஆக்கப்பட்டார். இந்தியாவிலுள்ள மற்றைய ஆங்கிலர் இராச்சியங் களுக்கும் அவரே தலைவராயிருந்தார். அவர், நியாயப்பிரமாணங்கள் எல்லா வற்றையும் அறிந்த பிராமணரை அழைத்துச் சட்ட நூல் செய்யும்படி பணித் தார். அவர்கள் `விவதன்வசேது’ என்னும் சட்ட நூல் செய்தார்கள். அதில் குடும்பச் சட்டங்களும், சொத் துரிமை பற்றிய காரியங்களும், இவைபோன்ற வையும் அடங்கியுள்ளன. அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கக் கூடியவர்கள் ஒருவரும் இன்மை யால், அது பாரசீகத்துக்குத் திருப்பப்பட்டு பின், பாரசீகத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. அது (‘A Code of Gentoo’) மேன் மக்களின் சட்டம் என்னும் பெயருடன் 1785-ல் அச்சிடப்பட்டது. இதுவே “இந்து லா” (Hindu Law) எனப்படுகின்றது. 1830 வரையில் வேதங்களைப் பற்றி மேல்நாட்டவர்கள் அறியவில்லை. வேதங்களின் ஒரு பகுதி 1838இல் இலண்டனில் வெளிவந்தது. 1849-க்கும் 1875-க்கும் இடையில் மாக்ஸ்மூலர் இருக்குவேத பாடல்களைச் சாயணர் உரையோடு அச்சிற் பதித்தார். 1851-க்கும் 1863-க்குமிடையில் இருக்கு வேதமூலம் முழுமையும் அச்சிடப் பட்டது. வேத மொழி செர்மன் மொழிக்கு (German language) இனமாயிருந்தமையின், மொழி ஆராய்ச்சியின் பொருட்டு மேல்நாட்டவர்கள் சமக்கிருதத்தைப் பயின்றார்கள். இலத்தின், செர்மன், பிரென்சு, ஆங்கிலம் முதலிய மொழிகளில் வேதங்கள் பலரால் மொழி பெயர்த்து அச்சிடப்பட்டன. இந்திய நாட்டிலுள்ள பிராமணரிலும் பார்க்க மேல்நாட்டவர்களே வேதங்களைப் பற்றி நன்கு அறிவார்கள். இன்று சரித்திர ஆராய்ச்சித் துறையில் வேலை செய்யும் பிராமண வகுப்பினரும், பிராமண வகுப்பினரல்லாதாரும் வேதங்களின் ஆங்கில மொழி பெயர்ப்புகளையே எடுத்து ஆளுகின்றனர். மேல்நாட்டு நன்மக்களின் குன்றாத உழைப்புக், காரணமாக ஆரிய வேதங்களும் அவைகளைப் பற்றிய உண்மைகளும் முற்றாக வெளிவந்துள்ளன. அவைகளைப் பிராமணரல்லாதாரும், இன்று நன்கு கற்றறியலாம். ஆகவே இன்று அவை மறைக்கப் பட்டிருக்கவில்லை.
ஆரிய வேதங்களைப் படித்துப் பார்த்தால், அவை சாதாரண மக்களால் பாடப்பட்டவை என்று எளிதிற் புலப்படுத்தலுமல்லாமல், அவை அறிவுடைய மக்களின் சமய நூலாக இருக்கத்தகாதன என்றும் தெள்ளிதிற் புலப்படும். தமிழ் மக்களுக்கும் ஆரிய வேதங்களுக்கும் யாதும் உறவு இல்லை. ஆரியரை எதிர்த்துப் போராடியவர்களும், தாசுக்கள் என்று அவர்களால் இழித்துக் கூறப்பட்டவர்களுமாகிய தமிழர், அழிந்து போக வேண்டுமென்று திட்டிப்பாடிய பாடல்கள் பல வேதங்களில் காணப்படு கின்றன. இவ்வுண்மைகளை எல்லாம் நம்மவர்கள் நன்கு அறிந்து உண்மை கடைப்பிடிக்குமாnற இந்நூல் வெளிவருகின்றது.
ஆரியர்
வேதங்களைப் பற்றி அறிந்து கொள்வதன்முன், நாம் ஆரியர் யார்? என்று அறிந்துகொள்ளுதல் வேண்டும். இரசியா நாட்டின் தென்கோடியில் ஒருவகை வெண்ணிற மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.1 அவர்கள் எப்பெயரால் அறியப்பட்டார்கள் என்று ஒருவராலும் அறிய முடிய வில்லை. அம்மக்கள் பாரசீகம், இந்தியா, ஐரோப்பாவின் பல பகுதிகளில் சென்று வாழ்ந்து, பற்பல பெயர்களைப் பெற்றனர். பெயர் அறியப்படாத அம்மக் களின் ஒரு கூட்டத்தினர் ஆரிய’ எனப் பாரசீக, ஆரிய வேதங்களிற் கூறப் பட்டுள்ளார்கள். இக் கூட்டத்தினருக்கு வழங்கியஆரிய’ என்னும் பெயரே அவர் இனத்தவர்களாகிய எல்லாக் கூட்டத்தினருக்கும் பெயராக வழங்குவ தாயிற்று. இந்தியா, பாரசீகம் ஐரோப்பாவின் பல பகுதிகளிற் சென்று வாழ்ந்து ஆரிய மக்களின் மொழிகளிலுள்ள பல சொற்கள், ஒரே வகையாக விருக் கின்றன. ஒரே வகையான அச்சொற்கள் பழைய ஆரியச் சொற்கள் எனத் துணியப்படுகின்றன. அவ்வகை ஆரியச் சொற்களைக் கொண்டு பழைய ஆரியர் வாழ்ந்த இடம், அவர்களின் நாகரிகம், அவர்கள் அறிந்திருந்த தொழில்கள், அவர் நாட்டிற் காணப்பட்ட பறவை, விலங்குகள், மரஞ்செடிகள், போன்றவை அறியப்படுகின்றன. அவ்வகை ஆராய்ச்சியினால் பழைய ஆரியர் இரசிய நாட்டின் தென்கோடியில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பது உறுதிப்படுகின்றது.
கலப்பற்ற ஆரியர் உளரா?
ஆரியர் என்னும் மக்கள், சென்ற சென்ற இடங்களில் வாழ்ந்த மக்களோடு தாராளமாகக் கலந்து கொண்டார்கள். இன்று இவ்வுலகத்திலேயே கலப்பற்ற ஆரியர் இலராவர். இந்திய நாட்டிலே, காசுமீரத்தில் அதிகக் கலப்பற்ற ஆரியர் வாழ்கின்றார்கள் என்று கருதப்படுகின்றது. இன்று, மக்கள் தம்மை ஆரியர் எனக் கூறிக்கொள்வது நகைப்புக் கிடமானது. அதிலும் தென்னிந்திய பிராமணர் அவ்வாறு தம்மை அபிமானித்து வருவதுதான் வியப்புக்களுள் மிக வியப்புடையதாகும்.1
வேத பாடல்களின் தொடக்கம்
இரசிய நாட்டினின்றும் வந்து, இந்திய நாட்டிற் குடியேறிய மக்கள் வழி பட்ட கடவுளர், தமிழர் வழிபட்ட கடவுளரிலும் வேறானோர். அலைந்து திரியும் மக்களாக இருந்தமையின், அவர்கள் கோயில்களை அமைத்துக் கடவுளரை வழிபடவில்லை. கடவுளரைக் குறித்துப் பலியிடுதலே அவர்களின் சமயமும் சமயச் சடங்குமாயிருந்தது. பலியிடும் போது, தெய்வங்கள், தாம் விரும்பிய இவ்வுலக சுகங்களைக் கொடுக்கும் பொருட்டுச் சிலர் அவர்கள் மீது பாடல் களைப் பாடினர். அப் பாடல்களின் தொகை வேதம் எனப்பட்டது. ஆரியர் கி.மு. 2000 வரையில் இந்திய நாட்டை அடைந்தார்கள். வேதபாடல்கள் வியாச முனிவரால் நான்காக வகுக்கப்பட்டன என்று சொல்லப்படுகின்றது. வியாசர் பாரத காலத்தவர். பாரதம் கி.மு. 13ஆம் நூற்றாண்டு வரையில் நிகழ்ந்ததெனப் படுகின்றது. ஆகவே கி.மு. 2000க்கும் கி.மு. 1300க்கும் உட்பட்ட காலங்களிற் செய்யப்பட்ட பாடல்கள், வேதங்களில் அடங்கியுள்ளன என்று விளங்கு கின்றது.
நான்கு வேதங்கள்
ஆதியில் வேதம் ஒன்றாக இருந்தது. அதற்கு இருக்கு என்று பெயர். இருக்கு வேதத்தில் 1028 பதிகங்கள் உண்டு. பதிகங்கள் என்பன பத்துப் பாடல்கள் கொண்டவை. வேதத்தில் உள்ள பதிகத்தில் பத்துக்குக் கூடியும் குறைந்தும் பாடல்கள் காணப்படுகின்றன. விளங்கும் இலகு நோக்கிப் பதிகம் என்னும் சொல் இங்குப் பயன்படுத்தப்படுகின்றது. இவைகளில் பதினொரு பதிகங்கள் வாலகில்லியராற் பாடப்பட்டனவென்றும், அவை பிற்காலத்தன வென்றும் கருதப்படுகின்றன. அவைகளை நீக்கிப் பார்த்தால் இருக்கு வேதத் திலுள்ளவை 1017 பதிகங்களே. 1017 பதிகங்களிலும் 10,600 பாடல்கள் உள்ளன. ஒரு பக்கத்தில் 33 வரிகள் அச்சிட்டால், இருக்கு வேத பாடல்கள் முழுமை யும் 600 பக்கங்களில் அடங்கும். இது கிரேக்க கவியாகிய ஹோமரின் இல்லியாட் என்னும் நூல் அளவு ஆகும்.
இருக்குவேதம் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மண்டலமல்லாமல் அட்டகம் என்னும் இன்னொரு பிரிப்பும் உண்டு. முதல் மண்டலத்திலுள்ள பாடல்கள் பல இருடிகளாற் பாடப்பட்டவை. இரண்டு முதல் எட்டுவரையில் உள்ள பதிகங்கள் ஒவ்வோர் இருடி குடும்பத்தினராற் பாடப்பட்டவை. ஒன்பதாம் மண்டலப் பாடல்கள், பல இருடிகளாற் பாடப்பட்டவை அப்பாடல்கள் முழுமையும் சோம இரசத்தைக் கடவுளாகத் துதிக்கின்றன. ஒன்பதாம் மண்டலத்துக்கும் பத்தாம் மண்டலத்துக்கும் இடையில், வாலகில்லியரின் பாடல்களாகிய பதினொரு பதிகங்கள் காணப் படுகின்றன. பத்தாம் மண்டலப் பாடல்கள் பத்து இருடிகளால் செய்யப் பட்டவை. இப்பாடல்களின் நடை, பொருள்களைக் கொண்டு இவை பிற் காலத்தன என வேத ஆராய்ச்சியாளர் கூறியிருக்கின்றனர்.
இருக்குவேதத்தினின்றும் பல பாடல்களை எடுத்தும், அவைகளோடு பிற பாடல்களைச் சேர்த்தும் பின்னும் இரு வேதங்கள் செய்யப் பட்டன. அவை யசுர், சாமம் எனப்படும். யாகக் கிரியைகளிற் படிக்கும் பாடல்கள் அடங்கிய தொகுதி யசுர் எனப்பட்டது. யசுர் வேதத்திற் காணப்படும் பாடல்களில் பாதிவரையில் இருக்குவேதத்தில் உள்ளன.
சாமவேதத்தில் 1550 பதிகங்கள் வரையில் உள்ளன. இவைகளுட் பெரும்பாலான இருக்குவேதத்தின் ஒன்பதாவது பத்தாவது மண்டலங் களிலிருந்து எடுக்கப்பட்டவை. சாமவேதம் யாகங்களில் இசையோடு பாடப்படும் பாடல்கள் அடங்கிய பகுதி.
பாடல்களுக்கு நாலு அடிகள் உண்டு; சில சமயங்களில் மூன்று அல்லது ஐந்து அடிகளும் காணப்படுகின்றன. ஒவ்வொரு அடிக்கும் எட்டு, பதினொன்று அல்லது பன்னிரண்டு அசைகள் உண்டு. அடிகள் பெரும் பாலும் ஒரே வகையாகவுள்ளன; சில சமயங்களில் நீளமாகவும் காணப்படு கின்றன. இருக்குவேத பாடல்கள் செய்யப்பட்ட மொழி, மிகப் பழமை யுடையது. அம்மொழியின் வளர்ச்சியாகிய பிற்கால இலக்கிய மொழிக்குப் பாணினி முனிவர் கி.மு. 4ஆம் நூற்றாண்டில் இலக்கணஞ் செய்தார்.
அதர்வண வேதம் நாலாவதாக உள்ளது. இதில் பில்லி சூனியம் போன்ற மந்திர வித்தைகள் கூறப்படுகின்றன. இதை வேதங்களுட் சேர்க்கலாமா, விடலாமா என்னும் கருத்து நீண்டகாலம் இருந்து வந்தது. ஆகவே சில இடங்களில் நான்கு வேதங்கள் என்றும் சில இடங்களில் மூன்று வேதங்கள் என்றும் கூறப்பட்டிருத்தலைக் காணலாம். மனுஸ் மிருதி மூன்று வேதங்களைப் பற்றிக் கூறுகின்றது.
வேதங்களிற் கூறப்படும் கடவுளர்
இருக்கு வேதத்திற் சொல்லப்படும் கடவுளர், இயற்கையின் உருவகங்களாவர். இறந்தவர் வணக்கமே இயற்கை வணக்கமாக மாறி யுள்ளதென்பது பல்லோர் கருத்து1. இராமாயணத்தின் சிக்கல்கள் (Riddles in Ramayana) என்னும் நூலில், ஆரியரின் தெய்வங்கள் அவர்களின் இறந்த முன்னோர்கள் என வைத்தியா என்னும் அறிஞர் கூறியுள்ளார். வேத பாடல்கள், சோமச்சாறு, நெய், மாமிசம் முதலியவைகளை நெருப்பில் பலியாக இட்டு யாகஞ் செய்யும்போது படித்தற்குரியன.
வேதங்களிற் கூறப்படும் தேவர்கள், தயஸ், வருணன், மித்திரன், ஆதித்தர், சூரியன், சாவித்தர், பூசன், விஷ்ணு, அஸ்வினிகள், உசாக்கள், இரதி, இந்திரன், உருத்திரன், மருத்துவர், வாயு, அல்லது வாதா, பிருதுவி, அக்கினி, பிரகஸ்பதி, சோமன், சிந்து ஆறு, விபாஸ் ஆறு, சுதுட்ரி (Sutlej) ஆறு, சரஸ்வதி (ஆறு) முதலியோராவர். தேவுக்களும் முன்பு இறப்பவர்களா யிருந்தார்கள். சோம இரசத்தைப் பருகி அவர்கள் இறப்பை ஒழித்தார்கள். தெய்வங்கள், வடிவில் மனிதனைப் போன்றனவே. தீக்கடவுளின் நாக்கும் உறுப்புக்களும் நெருப்பின் சுவாலைகள். சிலர் போர்க்கடவுளர். இந்திரன், இவ்வகையினன். கடவுளர், குதிரை அல்லது வேறு விலங்குகள் பூட்டிய தேரில் வானத்தில் சவாரி செய்கிறார்கள். அவர்களுடைய உணவு, பால், நெய், இறைச்சி, தானியம் முதலியன. அவர்களுக்கு அவ்வுணவு பலிகள் மூலம் கிடைக்கின்றன. அக்கினி அவர்களுக்கு அவைகளைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறான். சில சமயங் களில் அவர்கள் தமது தேர்களில் வந்து பலிகளை ஏற்கின்றனர். அவர்களின் இருப்பிடம் வானத்திலுள்ள சுவர்க்கம். அவர்களுக்கு ஆற்றல் மிக உண்டு. அவர்களை மகிழ்விப்பதால் அவர்கள் மக்களுக்கு நேரும் இடையூறு களைப் போக்குகின்றனர். உலகிலுள்ள எல்லா உயிர்களின் மீதும் அவர்கள் அதிகாரம் செலுத்துகின்றனர்.
வேதம் என்னும் பெயர்
ஆரிய மக்கள் தம்முன்னோர் கடவுளரைத் துதித்துப் பாடிய பாடல் களுக்கு வேதம் எனப் பெயரிட்டார்கள். வேதபாடல்கள் அறிவு வளர்ச்சிக் காகப் பாடப்பட்டனவல்ல. கடவுளின் மறைவான பெயர்களைக் கூறும் மந்திரங்களாகச் செய்யப்பட்டன. மந்திரம் என்பதற்கு மறைத்துச் சொல்லப் படுவது என்று பொருள். வேதம் என்பதற்கு அடி, வித்’ எனப்படுகின்றது அது பொருந்துமாறில்லை. ஆரிய மக்கள் வருமுன்னரே இந்திய நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு மறையிருந்தது. மறை இருவகை; கடவுளின் இரகசியமான பெயரைச் சொல்வதாகிய மந்திரம் ஒன்று; மற்றது குரு மாணாக்கர் முறையில் உபதேசிக்கப்படும் உண்மை ஞானங்கள். தமிழர் தமது தத்துவ ஞானங்களையும் சமயக் கருத்துக்களையும் நூலாகச் செய்யும் வழக் கில்லை. இதனை, “அந்நிலை மருங்கின் அறமுதலாகிய மும்முதற்பொருட்கும் உரிய என்ப” (தொல்.செய். 106) என்னும் தொல்காப்பியச் சூத்திரம் விளக்கு கின்றது. இதனால் தமிழரின் சமய சம்பந்தமான கருத்துக்கள் மறை, வேதம் எனப்பட்டன. வேதம் என்பதற்கும் மறை என்னும் பொருளேயாகும். வேதம் என்னும் சொல், மற்றைய ஆரிய மக்களின் மொழிகளிற் காணப்படாமையால், அது தமிழ்ச்சொல் என்பது நன்கு துணியப்படும். வேதம் என்னும் சொல்லுக்கு உண்மையான அடியைக் காணமாட்டாத ஆரிய மக்கள், அதற்கு அடி,வித்’ எனக் கூறலாயினர். தமிழிலிருந்து வேதங்களிற் சென்று ஏறியுள்ள பல தமிழ்ச்சொற்கள் உள்ளன என்பதைக் கால்டுவெல், கிற்றெல் முதலிய ஆராய்ச்சி வல்லார் காட்டியுள்ளார்கள். “தமிழ்ச் சொற் பிறப்பு ஒப்பியல் அகராதி” என, நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் வெளியிட்டு வரும் நூலில், தமிழிலிருந்து வடமொழியில் சென்று வழங்கும் பல தமிழ்ச் சொற்களுக்குத் தப்பாக வடமொழி மூலங்கள் கூறப்பட்டிருத்தல் எடுத்துக்காட்டப்பட் டுள்ளது. இன்று தமிழில் வழக்கொழிந்த அரிய தமிழ்ச்சொற்கள் பலவற்றை மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு முதலிய மொழிகள் காப்பாற்றி வைத்திருக்கின்றன அவ்வாறே ஆரிய மொழியும் வழக்கிறந்த பல தமிழ்ச் சொற்களைக் காப்பாற்றி வைத்திருக்கின்றது என நாம் துணிதல் கூடும். ஒரே பொருளைக் குறிக்கும் சொற்கள், அப்பொருளின் வெவ்வேறு இயல்புகளைக் குறிக்கும் சொல் மூலங்கள் வாயிலாகப் பிறந்து வழங்கின. அவற்றுட் சில தமிழில் வழக்கிறந்துபோக, மற்றவை சில வடமொழியிற் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பாய் என்னும் அடியாகப் பரி என்னும் சொல்லும், அசை என்னும் அடியாக அசுவம் என்னும் சொல்லும் பிறந்தன. அசுவம் என்னும் சொல் தமிழில் வழக்கிறந்தது. அது இன்று வடமொழியிற் காணப்படுதலின், அது வடமொழிச் சொல் என்று கருதப்படுகின்றது. இவ்வாறே வேதம் என்பது மறை என்னும் பொருளில் வழங்கிய தமிழ்ச் சொல் என்பது திண்ணம். இப் பெயரையே ஆரியர் தமது பாடல்களுக்கு இட்டு வழங்கினர். வேதங்களில் மறைத்தற்குரியது யாதும் இன்மையால், அப்பெயர் இடுகுறிப்பெயராக அவைகளுக்கு இடப்படலாயிற்று. தமிழர் தமது சமயத் தொடர்பாக வழங்கிய பெயர்களை, ஆரிய மக்களும் ஆண்டமையின் பிற்காலங்களில் பெரும் மயக்கம் உண்டாவதாயிற்று.
மந்திரங்கள் மறை ஆதல்
வரலாறு தொடர்பான உண்மை ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டு மாயின், நாம் உலகமக்களின் வரலாற்றை அறிய வேண்டும்.
எண்ணங்களே மொழியாக மாறுகின்றனவென்று நாம் எல்லோரும் அறிவோம். எண்ணங்களுக்கு ஆற்றல் உண்டு. ஒருவன் தும்மினால் அவனைப் பற்றி யாரோ நினைக்கிறார்கள் என்ற நம்பிக்கை, உலகமக்கள் எல்லோரிடையும் காணப்படுகின்றது. “வழுத்தினாள் தும்மினேனாக வழித்தழுதாள்-யாருள்ளித் தும்மினிரென்று” எனத் திருவள்ளுவனாரும் கூறுதல் காண்க. ஆப்பிரிக்காவிற் சில மக்கள் தமது உண்மைப் பெயரைப் பிறருக்கு வெளியிடுவதில்லை. உண்மைப்பெயரை உச்சரித்துப் பிறர் தமக்குத் தீங்கிழைக்க முடியுமென அவர்கள் நம்புகின்றார்கள். ஆகவே அவர்களின் உண்மையான பெயர், அவர்களின் கிட்டிய உறவினருக்கு மாத்திரம் தெரியும். தமக்குத் தீங்கு இழைக்கக்கூடிய விலங்கின் பெயரை அவர்கள் சொல்லார்கள். சொன்னால் அது வந்து உடனே தம்மைக் கொன்றுவிடும் என அவர்கள் நம்புகின்றார்கள். அவ்வாறு சொன்னமையால் அவ்விலங்கு வந்து அவர்களில் சிலரைக் கொன்று விட்டதென்னும் பழங்கதைகள் அவர்களிடையே உள்ளன. இராக்காலத்தில் `பாம்பு’ என்று சொல்லுதல் ஆகாது என, முதியவர்கள் குழந்தைகளுக்குக் கூறியதை நாம் கேட்டுள்ளோம். இறந்தவனின் பெயரைச் சொல்லுதல் ஆகாது என்னும் நம்பிக்கை சில மக்களிடையே இருந்து வருகின்றது; பெயரைச் சொன்னால் இறந்தவரின் ஆவி வந்து, தமக்குத் தொந்தரவு கொடுக்குமென்பது அவர்களின் நம்பிக்கை. இவ்வாறே தெய்வத்தின் உண்மையான பெயரைச் சொன்னால் தெய்வம் வந்துவிடும் என்னும் நம்பிக்கை மக்களிடையே இருந்து வந்தது. தெய்வங்களின் உண்மையான பெயர் சிலருக்கு மாத்திரம் தெரியும். யேகோவின் பெயரை கடவுளே மோசேய்க்குச் சொன்னார். அப் பெயர் மந்திரமாகப் பயன்பட்டது. அப்பெயரை யாரும் வெளிப்படையாகச் சொல்லுதல் கூடாதென்றும் சட்டம் இருந்தது. அவ்வாறு சொல்பவருக்குக் கடுந்தண்டனை விதிக்கப்பட்டது. எழுதுங்கால் அப்பெயர் வேறு வகையாக எழுதப் பட்டது. இன்று மூல மந்திரங்கள் என வழங்குவன, கடவுளர்களின் பெயர்களே. கடவுளரின் மறைவான பெயர்களும், அப் பெயர்கள் அடங்கிய பாடல்களும், மந்திரங்கள் அல்லது மறைகள் எனப் பட்டன. அவை குரு மாணாக்க முறையில் சொல்லிக் கொடுக்கப்பட்டு வந்தன. மறை, மந்திரம், வேதங்கள் என்னும் பெயர்கள் தோன்றுவதற்குக் காரணம் இங்கு விளக்கப் பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியில் இன்னபாடலுக்கு இன்ன ஆற்றல் உண்டு என்பதுபோன்ற கருத்துக்கள் உண்டாயிருந்தன. ஒருவன் யாது நிகழ வேண்டுமென விரும்பாமலே அவ்வகைப்பாடல் ஒன்றைச் சொன்னால், அது அப்பாடலுக்குரிய பயனைத் தப்பாமற் பயந்துவிடுமென்னும் கருத்து உண்டாயிருந்தது. “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த-மறைமொழி தானே மந்திர மென்ப” (தொல்-செய்-178) என்பது தொல்காப்பியம். “சொல்லிய சொல்லின் பொருண்மை யாண்டும் பயக்கச் சொல்லும் ஆற்றல் உடையாராவார், ஆணையாற் கிளக்கப்பட்டுப் புறத்தார்க்குப் புலனாகாமற் சொல்லும் சொற்றொடர்கள் எல்லாம் மந்திரம் என்ப” என அதற்குப் பேராசிரி யர் உரை கூறியுள்ளார். இவ்வகைக் கருத்தே உலகின் மற்றைய இடங்களிலும் இருந்து வந்தது. நச்சுச்சொல், மங்கலச் சொல், அமுத எழுத்து, நச்செழுத்து, அறம்பாடுதல் போன்றவை முற்கால மந்திரங்களைப் பற்றிய கருத்துக்களின் நிழல்களேயாகும்.
தெய்வங்களை அழைப்பதற்காகச் சொல்லப்பட்ட பாடல்கள், மந்திரங்களாகக் கருதப்பட்டன. அப்பாடல்கள் தெய்வங்களைத் துதிக்கும் நோக்கமாகப் பாடப்பட்டனவல்ல. அவைகளை வரும்படி கட்டாயப்படுத் தும் பொருட்டே பாடப்பட்டன. இன்று வழங்கும் தோத்திரங்கள் தெய்வங் களை அழைக்கும் மந்திரங்களைப் பின்பற்றிச் செய்யப்பட்டவையாகும்.
இக்கருத்துப் பற்றியே ஆரிய வேதங்களிற் காணப்படும் பாடல்கள் `மந்திரம்‘ என்னும் பெயரைப் பெறலாயின.
வேதங்கள் கடவுளாற் சொல்லப்பட்டன என்ற மயக்கம்
ஆரியரின் சமயம், யாகம் செய்வது ஒன்றனையே குறிக்கோளாகக் கொண்டது. ஊன், தானியம், நெய், சோமச்சாறு முதலிய உணவுகளை யாகங்கள் வாயிலாகத் தேவர்களுக்குக் கொடுப்பதால், இம்மையில் தாம் விரும்பியவற்றைப் பெறுவார்கள் என்றும், மறுமையில் செம்மையுற் றிருப்பார்கள் என்றும் அவர்கள் நம்பினார்கள். இந் நம்பிக்கையினால் அரசரும் செல்வரும் யாகங்களைச் செய்தனர். பிராமணர் புரோகிதராக விருந்து யாகங்களை நடத்தி வைத்தனர். அதற்காக அவர்கள் மிக்க பொருளைத் தக்கணையாகப் பெற்றனர். தமக்கு மெய்வருத்தமின்றி எத்தொழிலினால் மதிப்பும் செல்வமும் கிடைக்கின்றனவோ, அத் தொழிலை நிலைப்படுத்தும் பொருட்டு அவர்கள் தாம் பயின்றுள்ள மந்திரங்கள் கடவுளாற் சொல்லப்பட்டன வென்றும், அம்மந்திரங்கள் செய்யப்பட்டுள்ள மொழி கடவுள் மொழி என்றும், அம்மொழியில் சொல்லப்படாதவைகளைக் கடவுளர் அறிந்து கொள்ளமாட்டார் என்றும் கூறி அரசர், பெருமக்கள், பொது மக்கள் எல்லோரையும் நம்பும் படி செய்தனர். முற்கால மக்கள் பொய்களி லிருந்து மெய்யைப் பிரித்து அறியும் ஆற்றல் இல்லாமல் இருந்தார்கள்; அது பற்றியே ஒருபோதும் நிகழமுடியாத புராணக் கதைகளை மெய்யென நம்பி வந்தார்கள். இராமர் பதினோராயிரம் ஆண்டு அரசு புரிந்தார். தசரதன் அறுபதினாயிரம் ஆண்டு உயிர் வாழ்ந்தார் என்னும் கதைகளை மக்கள் நம்பி வந்திருக்கிறார்கள். மெகஸ்தீனஸ், ஹெரதோதஸ் (Heradotus) போன்ற ஆசிரியர்களும் நம்பத் தகாதவற்றை உண்மையென நம்பினார்கள். இந்தியாவில் சிலருக்குக் காது நீளமாக இருக்கிறது. அவர்கள் காதைப் பாயாக விரித்துக்கொண்டு அதன்மீது படுத்து நித்திரை கொள்ளுகிறார்கள். சிலர் மூக்கினால் உணவு கொள்ளுகிறார்கள் என்பனபோன்ற கதைகளை மெகஸ்தீனஸ் எழுதியுள்ளார். வரலாற்றாசிரியர்கள், முற்கால மக்களின் மனப்பான்மை இவ்வாறிருந்ததென்றும், ஆகவே பழங்கதைகளில் உள்ள உண்மைகளைப் பொய்களிலிருந்து பிரித்தறிதல் வேண்டுமென்றும், அது மிக வில்லங்கமான செயலென்றும் கூறியுள்ளார்கள்.1
தேவார திருவாசகங்கள் சொல்வதால்
வேதங்கள் கடவுள் வாக்காகுமா?
தேவார திருவாசகம், திருவாய்மொழி முதலியவைகளிலும் பிற தமிழ் நூல்களிலும், வேதங்கள் கடவுளாலருளப்பட்டன என்று கூறப்படுதலின், அவை கடவுளாற் சொல்லப்பட்டனவாகு மெனப் பலர் வழக்கிடுகின்றனர்.
சமய குரவர்களும் பிறரும் சரித்திர ஆராய்ச்சியில் சென்றவர்க ளல்லர். வேள்விபுரியும் பிராமணர் தமக்கு மதிப்பை யுண்டாக்கி, அதனால் மிக்க பொருளைத் தானமாகப் பெற நினைந்து சூழ்ந்து கட்டிய கட்டுக் கதைகள் மக்களால் நம்பப்படலாயின. இவை மாத்திரமல்ல; புராணங்களிற் காணப்படுவன போன்ற பல கற்பனைக் கதைகளும் மக்களால் மெய்போல நம்பப்பட்டு வந்தன. கடவுளின் பெருமையைப் பாடியவர்கள், கடவுளின் பெருமையை விளக்கும் பொருட்டு வழங்கிய கற்பனைக் கதைகள் பலவற் றையுமே எடுத்து ஆண்டுள்ளார்கள். இதனை ஒப்பவே, அவர்கள் வேதங்கள் கடவுள் வாக்கென ஓரோரிடத்துக் கூறியமை வியப்பன்று. சிவன் தக்கணா மூர்த்தி வடிவில் இருந்து சனகாதி நால்வர்க்கு நான்மறையின் உட்பொருள் ஓதினார் எனத் தமிழ் நூல்கள் கூறுகின்றன. வடமொழி வேதங்கள், பற்பல முனிவர்களால் பற்பல காலங்கனில் பல சிறு தெய்வங்களைத் துதித்துப் பாடிய பாடல்களாகக் காணப்படுகின்றன. வேதங்கள் கடவுளாற் செய்யப் பட்டன என்று நாட்டமுயன்று வருவோர், அவ்வேத பாடல்களைக் கொண்டே அதனை நாட்டுதல் வேண்டும். ஒருவன் முயலுக்கு மூன்று கால்கள் எனக் கூறினால், அவனுக்கு ஒரு முயலை நேரில் காண்பித்து அதற்கு நான்கு கால்கள் என மெய்ப்பிப்பதே தகுந்த முறை. சாத்தன் முயலுக்கு மூன்றுகால் என்றான்; ஆதலால் முயல்களுக்கெல்லாம் கால்கள் மூன்றே எனச் சாதிப்பாரு முண்டோ?
ஒவ்வொரு சமயத்தவரும், தத்தம் சமய நூல்கள் கடவுள் சம்பந்தமாக வெளிவந்தன வெனவே கூறுகின்றனர். சமய நூல்கள் மாத்திரமல்ல; மொழி களும் அம்மொழிகளுக்குரிய எழுத்துக்களும் கடவுளால் அருளிச் செய்யப் பட்டன என்று நம்பப்பட்டு வந்தன.
தமிழ்நாட்டில் இருக்கு முதலிய வேதங்களல்லாத பிற வேதங்கள், செவிவழக்கில் இருந்தனவென்பது பின்வருபவைகளால் அறியக் கிடக்கின்றது.
“நான்கு கூறாய் மறைந்த பொருளுடைமையான் நான்மறை யென்றார்; அவை தைத்திரியமும், பௌடிகமும், தலவராகமும், சாம வேதமுமாம். இனி இருக்கும், எசுவும், சாமமும் அதர்வணமும் என்பாரு முளர். அது பொருந்தாது”
நச்சினார்க்கினியர்
“இருக்கு முதல் வேதம் பௌடிகம் எனப்படும்”
“இரண்டாம் வேதம் தைத்திரிய மென்ப”
“மூன்றாவது சாமம் கீதநடை சாரும்”
“நான்காம் வேதம் அதர்வண மென்ப”
திவாகரம்
“சாந்தோகா பௌழியா தைத்தியா சாமவேதியனே” (நாலாயிரப் பிரபந்தம் பெரிய திருமொழி). மொகஞ்சதரோப் புதைபொருள் ஆராய்ச்சி யினால் ஆரியருக்கு முற்பட்ட தமிழர்களுக்கிடையில் ஆலமரத்தைச் சிவன் கடவுளின் புனித மரமாகக்கொள்ளும் சமயக் கொள்கையுள்ளதெனக் தெரிகின்றது. ஆரியருக்கு முற்பட்ட காலந்தொட்டு வரும் சில சமயக் கருத்துக்களையே தமிழர் இறைவன் கல்லாலின் கீழ் இருந்து அருளிச் செய்த நான்மறை என நம்பிவந்தார்கள் ஆகலாம். தமிழர் முறையைப் பின்பற்றியே ஆரியர் தமது வேதங்களையும் நான்காக்கினர் எனக் கூறுதல் பிழையாகாது. ஆரியருக்கு வேதங்களை நான்காக வகுத்துக் கொடுத்து அவைகளுக்குப் பெயரிட்டவர் பரதர் (தமிழ்) வகுப்பினராகிய வியாசரே யாவர். மனு, திராவிட அரசன் எனப் புராணங்கள் கூறுகின்றன. கி.மு. முதல் நூற்றாண்டு வரையில், பிராமணர் ஒரு சட்ட நூலைச் செய்து அதற்கு மனு தரும சாத்திரம் எனப் பெயரிட்டனர். இவ்வாறு பொய்ப் பெயர்கள் புனைந்து நூல்களைக் கட்டினமையினாலேயே, தமிழ்நாட்டில் பெரு மயக்கம் நேர்ந்தது.
தமிழருக்கு ஆரிய வேதங்கள் முதல் நூல்களாகுமா?
இன்று, கிறிந்தவர்கள், மகமதியர் அல்லாத சிறுவர்களுக்குப் பள்ளிக் கூடங்களில் சைவ, வைணவர்களுக்குச் சமய முதல்நூல்கள் நான்கு வேதங்கள் என்றும், அவை இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்களென்றும், ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கின்றனர். இருசாராரும் அவைகளைப் பெயரளவிலறிவார்களேயன்றி நூலளவில் அறியார்கள். ஆறுமுக நாவலரும் தமது சைவ வினாவிடையில், சைவ சமயத்தவர்களுக்கு முதல்நூல்கள் இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்கள் என்று கூறியுள்ளார்.
“வேதம் நித்தியனாகிய பரமசிவனாற் கூறப்பட்டமையினாலும், இறுதிக்காலத்துப் பரமசிவத்திலொடுங்கிப் படைப்புக்காலத்திற் றோன்றுமா தலானும் நித்தியமென உபசரித்துக் கூறப்பட்டது”
சிவஞானபாடியம்
தமிழர், ஆரிய மக்களை மிலேச்சர் என்றே வழங்கினர். அவர்கள், ஆரியரையும் அவர்கள் நூல்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை. திவாகரத் தில் ஆரியருக்குப் பெயராக மிலேச்சர் என்னும் சொல் காணப்படுகின்றது. சமயகுரவர் காலங்களில் ஆரியர் தமிழர் போராட்டங்கள் நடந்துகொண் டிருந்தன. இவ்விரண்டு மக்களையும் சந்து செய்யும் பொருட்டே, சமயகுரவர்.
“ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்”
“செந்தமிழோடு ஆரியனைச் சீரியானை”
“ஆரியந் தமிழோடிசை யானவன்”
என்பன போன்ற வாக்கியங்களைக் கூறுவராயினர். “ஆரியப் புத்தகப் பேய் கொண்டு புலம்பிற்று” என நக்கீரர் கோபப்பிரசாதத்தில் கூறியிருத்தலும் காண்க. இவை போன்ற பல காரணங்களால் தென்னாட்டவர், நான்மறை எனக் கொண்டவை வடமொழி வேதங்களல்ல எனவும் கருதப்படுகின்றன. பெய ரொற்றுமைகளால் யாதும் துணிய முடியாது. பழைய பெயர்களுடன் புதிதாக ஊர் பேர் அறியாதவர்களால் எழுதப்பட்ட நூல்கள் பல வெளி வந்துள்ளன. பேரிசைக் சூத்திரம், பரத சேனாபதீயம் போன்றன சில எடுத்துக்காட்டுக்களாகும்.
“மறைகள் ஈசன் சொல்” - அருணந்தி சிவம்
“சாத்திரமாவது வேதமன்றோ வதுதான் சுயம்பு” – நீலகேசி
வேதங்கள் கடவுளாற் செய்யப்பட்டன என்று நம்பி வந்தமை யினால் அவர்கள் அவ்வாறு கூறுவாராயினர். வேதங்களை அவர்கள் பார்த்திருப் பின் அவ்வாறு ஒருபோதும் கூற உடன்பட்டிருக்க மாட்டார்கள். வேதங்கள் சைவ வைணவ சமயங்களுக்கு மாறானவை. சைவ வைணவ சமயங்கள் ஆகமங்களைப் பிரமாணமாகக்கொள்ளுகின்றன. வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேற்றுமை வடக்குக்கும் தெற்குக்கும் உள்ளது போன்றது என்று ஆராய்ச்சியாளர் நன்கு ஆராய்ந்து கூறியுள்ளார்கள்.1
வேத பாடல்கள் சில
வேத பாடல்கள் சிலவற்றின் மொழிபெயர்ப்பை இங்குத் தருகின் றோம். அவைகளை நோக்கினால் தமிழர் சமயத்துக்கும் வேதங்களுக்கும் யாதும் தொடர்பில்லையென்று நன்கு விளங்கும்.
1. சோம இரசமே! இந்திரன் அருந்துதற் பொருட்டுப் பிழிந்தெடுக்கப் பட்ட நீ, மிக இன்சுவையோடு கூடியதும், மிகக் களிப்பைக் கொடுப்பதுமாகிய துளிகளாய் ஒழுகி நிறைவாயாக.
சாமவேதம் பவமானகாண்டம்
2. இந்திரனே! சோம இரசம் பிழிந்த எனது நண்பர்களாகிய அம்மனிதர்கள் மிகப்பற்றுடையவர்களாய்ப் பசுவைப்போல உன்னையே சிறப்பாகப் பார்க்கிறார்கள்.
3. இந்திரன் கத்துருவ இருடியாற் பிழியப்பட்ட சோம இரசத்தைப் பருகினான்; பருகிய பின்னர் கத்திரவாகு என்னும் அரசனைக் கொன்றான். அதனால் இந்திரனுடைய வீரத்தன்மை புலப்பட்டது.
4. சோம இரசமே! மிகுந்த இன்சுவையோடு கூடிய நீ, ஆராதிக்கின்ற வேள்வியாகிய இடத்தைப் பற்றி விளங்குவதாய், மருத்துக்களோடு கூடிய இந்திரன் பொருட்டுக் காலத்தில் நிறைவாயாக.
சாமவேதம் - ஐந்திரகாண்டம்
வேதபாடல்கள் என்பன இவ்வாறே இந்திரன், வருணன், சோமன், மருத்துவர் போன்ற பல தெய்வங்களைத் துதிக்கின்றன. இவ்வகைப் பாடல்களைக் கடவுள் செய்தார் எனக் கூறுதல் கடவுளை இழித்து உரைப்ப தாக முடியுமன்றோ?
வேதபாடல்கள் எவ்வாறு பயன்படத்தக்கன
எகிப்திலே பல பழைய சமாதிகளும் கட்டடங்களும் அழிந்துகிடக் கின்றன. மொகஞ்சதரோ அரப்பா என்னும் இடங்களில் பண்டைக் காலத்தியப் பழம்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவைகளைக் கொண்டு அக்கால மக்களின் வாழ்க்கை, நாகரிகம் ஆகியன அறியப்படுகின்றன. அவைகளை ஒப்ப, வேதங்களும், பழைய பொருள் ஆராய்ச்சிக்குப் பயன்படுமேயன்றிச் சமய நூலாகக் கொள்வதற்குச் சிறிதும் பயன்படாவென்க. அவைகளைச் சமய நூலாகக் கொள்வது எவ்வாறிருக்குமெனில், இன்று உருக்கினால் செய்து பயன்படுத்தப்படும் செவ்விய கூறிய ஆயுதங்களைக் கைவிட்டுப், பிடி இறுக்காதனவும், கரடுமுரடான கற்களாற் செய்யப்பட்டனவுமாகிய, பழைய கற்கால மக்கள் பயன்படுத்திய ஆயுதங்களைப் பயன்படுத்த முயன்றது போலவும், இன்று வழங்கும் சில்லுள்ள வண்டிகளையும், நீராவி, மின்சாரங் களால் இயக்கப்படும் வண்டிகளையும் கைவிட்டுச், சில்லில்லாத சறுக்கி வண்டிகளைப் பயன்படுத்த எண்ணியது போலவும் ஆகும்.
இவ்வுண்மையை அறிந்துகொள்ளமாட்டாத ஒருசிலர், வேதங் களே தமக்கு முதல் நூலெனக் கொள்வதாலும், தாம் அவ்வேத பாடல்களைச் செய்தவரின் மரபிலுள்ளவர்கள் எனக் கூறிக்கொள்வதாலும் தமக்கு உயர்வுண்டாகின்றது எனக் கருதிவருகின்றனர். இவ்வாறு கொள்ளும் ஒரு கூட்டத்தினருக்குப் பெருமை கொடுத்து அவர்களே சமயத்தைத் தாங்கி வருகிறார்கள் என நம்பியவரும் நம்மவர் செயல் மிக வியப்பு உடையதே! வேதங்களில் கூறப்படும் பொருள்கள் எவை என்பதை இனிச் சிறிது ஆராய்வோம்.
யாகங்கள்
யாகம் என்பது தெய்வங்களுக்கு உணவு கொடுத்தல். உணவு நெருப்பில் இடப்பட்டது. நெருப்பு அக்கினி என்னும் தெய்வமாகக் கொள்ளப்பட்டது. அது தன்னிடத்தில் இடப்பட்ட உணவுகளை ஏற்றுத், தேவர்களிடம் சேர்ப்பிக்கிறது என ஆரிய மக்கள் நம்பிவந்தார்கள். அக்கினியைத் துதித்துப் பாடப்பட்ட பல பாடல்கள், வேதங்களில் காணப்படு கின்றன. யாகத்தில் மந்திரங்களை ஓதித் தேவதையே அழைப்பவர் ஹோதா என்றும், பாட்டுக்களைப் பாடிக்கொண்டு சோமரசத்தைப் பலிசெலுத்துகின்ற வர் உத்காதா என்றும், யாகக்கிரியைகளைச் செய்பவர் அத்வார்யு என்றும், பெயர் பெறுவர். தலைமைப் புரோகிதராகிய பிரமா, யாகத்துக்கு இடையூறு நேராமல் தென்திசையில் இருந்து காவல் செய்வார். தெற்குத் திசை இயமனின் திசையாதலின், அங்கு நின்றும் துட்ட தேவதைகள் தோன்றி மக்களுக்குப் பயம் உண்டாக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. யாகங்களிற் பலவகை உண்டு. சோமயாகம், நரமேதம் (நரபலி) குதிரையாகம், பசுயாகம், ஆட்டுக்கடா யாகம் என்பன அவற்றுட் சில. தக்கனுடைய வேள்வியில் ஆட்டுக்கடாக்கள் வெட்டப் பட்டன என்று புராணங்கள் கூறும். “தக்கன் வேள்வித் தகர் தின்று” எனத் திருவாசகத்தில் வருதல் காண்க. யாகங்கள் வாயிலாகத் தேவர்களுக்கு அவர்கள் விரும்பும் உணவுகளையும், மதுவகைகளையும் கொடுத்தால், அவர்கள் அவ்வாறு செய்கின்றவர்களுக்குச் செல்வங்களையும், பிற இம்மைப்பயன்களையும் கொடுப்பார்கள் என அக்கால ஆரிய மக்கள் நம்பி யிருந்தார்கள். யாகஞ் செய்வதே அக்கால மதத்தின் முடிவான கொள்கை. இதற்குமேல் மனிதன் இம்மையில் சமய சம்பந்தமாகச் செய்யக்கூடியது எதுவும் இருக்கவில்லை. யாகங்களில் கள்ளும் ஊனும் புசிக்கப்பட்டன. இதனைக் கைவல்லிய நவநீதமுடையாரும் “கள்ளுமூனும் விரும்பினால், நீ மகங்கள்செய்” என வேதங்கள் விதித்திருக்கின்றன எனக் கூறியுள்ளார்.
சோமயாகம்
1சோமம் என்பது ஒருவகைக் கொடி. அது இந்தியாவிலும் பாரசீகத்திலும் பெரும்பாலும் மலைகளில் படர்வது. சோமக்கொடிகளை இரு கற்களினிடையே வைத்து நசுக்கிப் பிழிந்த சாற்றைப் பாலிற் கலந்து புளிக்கவைத்தபோது, அது மிகவும் வெறியைக் கொடுக்கக்கூடியதா யிருந்தது. சோமச்சாற்றைக் குடித்த கடவுளர் அதன் வேகத்தால் செயற்கரும் செயல்களைச் செய்யும் ஆற்றலைப் பெற்றார்கள் என்று பழைய ஆரிய மக்கள் நம்பி வந்தார்கள். அவர்கள் சோமச்சாற்றைத் தெய்வமாகவும் வணங்குவாராயினர். இருக்கு வேதத்தின் ஒரு மண்டலத்திலுள்ள பாடல்கள் முழுமையும், சோமச்சாற்றை வழுத்திப் பாடப்பட்டுள்ளன. இன்னும் வேதத்தின் மற்றைய இடங்களிலும், இச்சோமச்சாறு துதிக்கப்படுகின்றது. இது மிகவும் சிறுபிள்ளைத் தனமான செயல் என்பதை உணர்ந்த பிற்காலத்தார் அவை “சோமன்” எனப்பட்ட சந்திரனைக் குறித்துப் பாடப்பட்டனவெனக் கூறுவாராயினர். இது சிறிதும் பொருத்த மற்றதென வேத பண்டிதர்கள் கூறி யுள்ளார்கள். இன்று கள்ளை ஒழிக்க வேண்டு மென மக்கள் உணருகின்றார்கள். அதோடு கள் குடித்தல் கீழ் மக்களின் செயலென்றும் கருதப்படுகின்றது. அவ்வகையான சோமக் கள்ளைத் துதிக்கும் பாடல்களைக் கடவுள் செய்தார் எனக் கூற எவரும் உடன்படுவார்களா? அப்பாடல்கள்தான் தமது சமயத் துக்கு அடிப்படை எனக் கூறும் ஒரு கூட்டத்தினரைத் தமது சமயக் குருமார் எனக் கொள்ளும் மக்கள், பைத்தியக்காரர் போன்றவர்களாவர். இவ்வகை யான பாடல்களைச் செய்தவர்களே தமது கோத்திர முதல்வர் என அன்னோர் கூறுகின்றனரன்றோ? என்ன அறியாமை!
“உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரா
லெண்ணப் படவேண்டா தார்” – திருக்குறள்
நரமேதம்
நரமேதம் என்பது மனிதரைக் கொன்று செய்யப்படும் யாகம். இவ்வகையான யாகங்களைச் செய்யும் கிரியை முறைகளும், அப்போது பாடப்படும் பாடல்களும், சொல்லப்படும் மந்திரங்களும் வேதங்களிற் காணப்படுகின்றன. இது பிற்கால மக்களுக்கு மிகவும் காட்டு மிராண்டித் தனமாகத் தோன்றினமையால், அவர்கள் நரமேத யாகங்களில் மனிதன், யூபத்தில் (பலிமிருகத்தைக் கட்டிவைக்கும் தூண்) கட்டி வைக்கப்பட்டா னல்லாமல் கொல்லப்பட்டானல்லன் என்று பலவாறு எழுதுவாராயினர். இது சோமன் என்றால், சோமக்கள் அன்று; சந்திரன் எனக் கூறியவர்களின் கூற்றை ஒத்தது. மனிதனாயிருந்தாலென்ன, விலங்காயிருந்தாலென்ன, கொல்லப்பட்ட பலிகளின் இறைச்சி புரோகிதருக்குப் பகிர்ந்து அளிக்கப் பட்டது. ஆரியர் மாமிச உணவை விலக்கியிருந்த வரல்லர். மனுஸ்மிருதி ஆட்டுக்கடாக்களின் இறைச்சியைக் கொண்டு இறந்தவரின் “சிரார்த்தம்” செய்யும்படிக் கூறுகின்றது.
தைத்திரியப் பிராமணத்தில், பிராமண சாதித் தெய்வத்துக்குப் பிராமணனையும், சத்திரிய சாதித் தெய்வத்துக்குச் சத்திரியனையும், மருத்துக்களுக்கு வைசியனையும், தவங்களுக்குத் தலைமையாயுள்ள தெய்வத்துக்குச் சூத்திரனையும், இருள் தெய்வத்துக்குத் திருடனையும், நரகத் தெய்வத்துக்கு வாத்தியக்காரனையும் பலியிட வேண்டுமெனக் கூறுகின்றது. இவ்வாறு நூற்றெழுபத்தெட்டுத் தெய்வங்களுக்கும் பலியிட வேண்டிய 178 வகை நர பலிகளைப் பற்றி அந்நூல் கூறியுள்ளது.1 “காளிக புராணம் என்னும் நூலில்,” விதி முறைப்படி செய்யப்படும் நரபலியினால் தேவி ஆயிரம் ஆண்டுகள் நிறைவு அடைகின்றாள். மனிதத் தசைப் பலியினால் வயிரவர் மூவாயிரம் ஆண்டுகள் உவந்து நிறைவு அடைகின்றார். நைவேத்தியம் செய்யப்பட்ட மனித இரத்தம் உடனே அமுதமாக மாறு கின்றது. ஆகவே தேவியை வணங்கும்போது தலையும் இறைச்சியும் நைவேத்தியம் செய்யப் படவேண்டும்”2 எனக் கூறப்பட்டுள்ளன.
இந்தியாவிற்1 கற்காலம் என்னும் நூலில் கூறப்படுவது பின்வருமாறு “வேதகாலத்தில் நரபலி சர்வசாதாரணமானது. இதைக் குறித்த கிரியை முறைகள், யசுர் வேத சங்கிதைகள், யசுர்வேதப் பிராமணங்கள், சாங்காயன வைதான சூத்திரங்களிற் கூறப்பட்டுள்ளன. யாகஞ் செய்பவனின் மனைவி பலியிடப்பட்டவனை (சவத்தைச்) சேர்தல் (அணைத்தல்) ஆகிய இடக்கரான கிரியையும் நடத்தப்பட்டது. அப்பொழுது மந்திரங்கள் தொடர்பாகக் கூறப் பட்டன. சில சமயங்களில் இவ்விடக்கரான கிரியைக்கு அனுமதிக்கப் படுவதைப் பற்றி அரசனின் மனைவியருக்கிடையில் போட்டியிருந்ததென்று சொல்லப்படுகின்றது.” மக்கள் அறிவு வளர்ச்சிபெற்ற காலத்தில் மனிதனைப் பலியிடுவதற்குப் பதில் அவன், யூபத்தோடு கட்டிவைத்துப் பின் அவிழ்த்து விடப்பட்டான். நரபலி இடப்பட்ட காலத்தில் நரமாமிசம் புரோகிதரால் உண்ணப்பட்டதெனத் தெரிகின்றது.
அசுவமேத யாகம்
குதிரையைக் கொன்று செய்யும் யாகம் அசுவயாகம் எனப்பட்டது. மனிதனுக்குப் பதில் குதிரை பலியிடப்பட்டதாகத் தெரிகின்றது. யாகத்தில் மாத்திரமன்று, சாதாரணமாகக் குதிரை இறைச்சி ஆரிய மக்களால் உண்ணப்பட்டது. குதிரை யாகத்திலும் நர மேத யாகத்தில் செய்யப் பட்டது போன்ற இடக்கரான கிரியை செய்யப்பட்டது. விதவா விவாகத்தில் சொல்லப் படும் `உதிர்ஷ்வ ஆரி (Udershava ari) என்னும் மந்திரம் பிணச் சடங்குகளிற் சொல்லப்படுகின்றது. அது இடக்கரான கிரியையின் பின்பு, குதிரையோடு படுத்திருக்கும் அரசியை, அவளுக்காகக் காத்து நிற்கும் அரசனை அடையும்படிச் சொல்லப்படும் மந்திரமாகப் பயன் படுத்தப்பட்டது.2
மனிதனுக்குப் பதில் குதிரையும் குதிரைக்குப் பதில், எருமை அல்லது பசுவும், பசுவுக்குப் பதில் ஆடும், பின்பு விலங்குகளுக்குப் பதில் பலகாரங் களும் பலியாகக் கொடுக்கப்படலாயின. வேதம் என்பது இவ்வகையான யாகங்களுக்காக மாத்திரம் எழுந்த நூலேயாகும்.
வேத கால மக்கள் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்
சில பிராமணர், புரோகிதர், குருமார்களுக்கு அதிக நிலங்கள் இருந் தன. இருடிகள் பாடல்களைச் செய்தார்கள். அவர்கள் அதற்குக் கைம்மாறாகப் பொன்னாற் செய்த பூக்கள், கழுதைகள், கம்பளி ஆடு, எருது, மூங்கில், பதனிடப்பட்ட தோல்கள், அடிமைப்பெண்கள், முத்தினால் அலங்கரிக்கப் பட்ட குதிரைகள், தேர்கள், வீடுகள் முதலியவற்றைப் பெற்றார்கள்.
போர் செய்யும் வகுப்பினரால் யுத்தம் செய்யப்பட்டது; இருடிகளும், பிராமணரும் படைகளின் பின் போர்க்களத்திற்குச் சென்று போரில் பங்கு பற்றினார்கள். போர்க்கடவுளாகிய இந்திரனை வணங்குவோர் வெற்றியை வேண்டி, அவனுக்குச் சோமக்கள்ளையும், எருமை மாட்டு இறைச்சியை யும் படைத்தார்கள்.
போரில் தோற்றவர்களுக்குக் கொடிய தண்டனை விதிக்கப்பட்டது. இந்திரன் விருத்திரனைத் தோற்கடித்து அவனுடைய விதையை அறுத்து விட்டான். அவர்கள் தருணம் வாய்த்தபோது பகைவருடைய விதைகளை அறுத்துவிட்டார்கள்.
மக்கள் சாதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தார்கள். மணத்தைப் பற்றிய கட்டுப்பாடுகள் இருக்கவில்லை. ஒரு பெண் பிராமணரல்லாத பத்துக் கணவரை முன்வைத்திருந்தபோதிலும், ஒரு பிராமணன் அவள் கையைப் பிடிப்பானாயின், அவள் அவனுடைய மனைவியாவாள். பிராமணப் பெண்கள் மற்றவர்களோடு இருந்தபோதும், குற்றமடைந்தவர்களாகக் கருதப் படமாட்டார்கள். அவர்கள் மறுபடியும் அவர்களின் கணவரிடம் சேர்க்கப்பட லாம். பிராமணரின் மனைவியரை வீட்டுக்குள் பூட்டி வைத்திருந்தவர்கள் மீது திட்டிக்கூறும் மொழிகள் கூறப்பட்டன.
பிராமணர், தாம் மனித தெய்வங்கள் எனக் கூறினார்கள். அவர் களுக்குத் தீங்கிழைத்தவர்கள் மேலேயிருக்கும் கடவுளரால் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். தங்களை மதியாதவர்களைப் பிராமணர் தண்டிக்கலாம். அப்பொழுது அவர்களுடைய நா, வில்லின் நாணாகின்றது; சத்தம் அம்பாகின்றது. அவர்கள் மந்திர வித்தையில் வல்லவர்களாயிருந் தார்கள். பிராமணனின் பசுவைப் பிராமணரல்லாதார் உண்ணுதல் ஆகாது. அப்படிச் செய்தால் பொல்லாத பாவம் சூழும். அவன் மீது உமிழ்ந்தவன் இரத்த ஆற்றில் இருந்து மயிரைத் தின்பான். அரசர் திரவியங்களைப் பிராமணருக்குத் தானமாகக் கொடுத்தார்கள். இரட்டைக் கன்றுகள் ஈன்ற பசு, பிராமணனுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.
மக்களின் மது வகைகள் சோமமும், சுராவும், சோமக் கொடி, கற்களால் நசுக்கி அரைக்கப்பட்டுக் கம்பளி ஆடையிலிட்டுப் பிழிந்து பாலிற் கரைத்துக் குடிக்கப்பட்டது. சோமம் இனிப்பானதென்றும், உண்டவர்களை நன்றாகப் பேசச் செய்யும் எனவும்படுகின்றது. வால் கோதுமை அல்லது அரிசியி லிருந்து இறக்கப்பட்ட சுரா, வாலையினால் வடிக்கப்பட்டது.
விதவைகளை மறுமணஞ் செய்தார்கள். விதவைகள் கணவனின் சகோதரனைச் சேருதல் குற்றமாகக் கருதப்படவில்லை. யுத்தத்தில் பெண்கள் வெற்றிப் பொருளாகக் கருதப்பட்டார்கள். பெண்களின் மனம் புலியின் மனத்துக்குச் சமமானது. ஆண்கள் பெண்களோடு போர் செய்தல் தகுதி யில்லாத செயலென்று இருடிகள் கருதவில்லை. குருமார் தலையில் ஒருபிடி மயிர்விட்டுத் தலையைச் சிரைத்தார்கள். முனிவர்கள் தலைமயிரை வளரவிட்டிருந்தார்கள். அவர்கள் அழுக்கு நிறமான ஆடையை உடுத்தி அலைந்து திரிந்தார்கள். அவர்கள் கடவுளாகக் கருதப்பட்டார்கள்.
இல்லறத்தானுடைய தினசரி வாழ்க்கை மந்திர வித்தைகள் பலவற்றோடு தொடர்புடையதாயிருந்தது. ஒவ்வொரு வியாதியும் ஒவ்வொரு வகைக் கெட்ட தேவதையால் உண்டாகின்றது; அல்லது பகைவரின் சூனிய வித்தையால் உண்டாகின்றதென்று கருதப்பட்டது. இந்திரன் ஒரு தாயத்து அணிந்திருந்தான். வருணனும் அவ்வாறு ஒன்று அணிந்திருந்தான். மந்திரங்களினால் அரசன் சிங்கத்தின் தன்மை அடைந்து மக்களை விழுங்கத்தக்கவர்களாகின்றான்.
சோமயாகத்தில் விலங்குகள் கொல்லப்பட்டன. விலங்கு கட்டி வைத்துக் கொல்லப்பட்டது. அதன் வெளியீரல் தெய்வங்களுக்குக் கொடுக் கப்பட்டது. பலி கொடுக்கும்போது தெய்வங்களின் இரகசியமான பெயர் உச்சரிக்கப்பட்டது. அல்லாவிடில் பலி அவர்களை அடையாது.
மந்திரகால இறுதிக்குமுன் கிரியைகள் முற்றாக வளர்ச்சியடைந் திருந்தன. சிறந்த பெரிய கிரியை சோம யாகமாகும். சோமப்பூண்டு சோம அரசன் எனப்பட்டது. அப்பூண்டு யாகசாலைக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கே அதற்குப் பல துதிகள் பாடப்பட்டன. ஏழு புரோகிதர்கள் தண்ணீர் தெளித்தார்கள். மாட்டுத் தோலின் மீது வைக்கப்பட்ட இரண்டு கற்களி னிடையே வைத்து அது நசுக்கப்பட்டது; அல்லது உரலில் இட்டு உலக்கை யால் இடிக்கப்பட்டது. பின்பு ஒரு தட்டில் வைத்துப் பிழிந்து சாறு எடுக்கப் பட்டது. சாறு கம்பளி ஆடையால் வடிக்கப் பட்டது. அதர்வண புரோகிதன் அதன் மீது பாலை ஊற்றி பத்து விரல் களால் கலக்கி ஆற்றினான். அது மரச் சாடிகளுக்குள் விட்டுப் பலி பீடத்தில் வைக்கப்பட்டது. கடவுளுக்கு வைத்த பின், அது புரோகிதருக்குக் குடிக்கக் கொடுக்கப்பட்டது. சோமச்சாறு ஒரு நாளில் மூன்றுமுறை கொடுக்கப் பட்டது. அதனோடு மாவினாற்செய்த பலகாரமும் வைக்கப்பட்டது. சில சமயங்களில் சோமச் சாறு உணவோடு சேர்த்துச் சமைத்துப் படைக்கப்பட்டது. இந்திரன் அளவில்லாத சோமச் சாற்றைப் பருகிய பெரிய கடவுளாவன். பிறந்த தினத்திலேயே இந்திரனுக்கு அவன் தாய் அதனைப் பருகக் கொடுத்தாள். அவன் முப்பது மிடாக்கள் நிறைந்த இரசத்தை ஒரே தடவையில் பருகினான். சோமன் இருடிகளுக்குப் பாடல்களைப் பாடும் ஆற்றலைக் கொடுத்தான். சோம யாகத்தில் நடப்படும் யூபம் வன அரசன் எனப்பட்டது. அது தருப்பைப் புல்லின் மீது வைக்கப் பட்டது. அதற்கு ஆபரணங்களும் மாலைகளும் சூட்டப்பட்டன. பலவகை நிறங்களாலும் அது அலங்கரிக்கப்பட்டது. அது யாகத்தீக்குக் கிழக்கே நடப்பட்டது. பலி விலங்கு அதில் கயிற்றாற் கட்டப்பட்டது. விலங்கின் தலை, அரை, கால்கள் என்பன கட்டப்பட்டன. அதன் ஒன்பது வாயில்களையும் அடைத்துப் பிடித்து, அது சாகும்வரை இரகசிய உறுப்பின் மீது அடிக்கப் பட்டது. மிருகம், பட்டடையின்மீது வைத்துப் பக்குவமாக வெட்டப்பட்டது. வெட்டும்பொழுது ஒவ்வொரு உறுப்பின் பெயரும் சொல்லித் துதிக்கப் பட்டது. உறுப்புக்களின் மூட்டுக்கள் திறமையோடு பிரிக்கப்பட்டன. இறைச்சி சமைத்துத் தெய்வங்களுக்குப் படைக்கப்பட்டது; பின்பு வழிபடுவோர் அதனை உண்டார்கள். பிற்கால அசுவ மேத யாகங்கள் போலல்லாது, முற்காலக் குதிரையாகம் மிகவும் சாதாரணமாக இருந்தது. குதிரைக்கு முன்னால் புள்ளி யுள்ள ஆடு விடப்பட்டது. குதிரையும் பலிப் பொருள்களும் விலையுயர்ந்த போர்வையால் மூடப்பட்டன. ஆடும் குதிரையும் மூன்று முறை குண்டத்தைச் சுற்றிக்கொண்டு வரப்பட்டன. குருமார் யூபத்தையும் சமைக்கும் பாத்திரங் களையும் கொண்டு பின்னே சென்றார்கள், குதிரையைப் பலியிடும் இடத்தில் விட்டு அதற்குப் புல் கொடுக்கப்பட்டது. குதிரை கம்பத்தோடு கட்டிக்கொன்று, மற்ற மிருகங்களைப் போல உண்ணப்பட்டது. பலியிடப்பட்ட விலங்கு இறக்கவில்லை, கடவுளரிடம் சென்றது என்று கருதப்பட்டது.
இந்திரன் பெரிய கடவுளாயிருந்தபோதிலும் விலிஸ்தெங்கா என்னும் ஓர் அசுரப்பெண், அவனைக் கடவுளர்களின் இடத்திலிருந்து தன்னிடத் துக்கு மந்திரத்தால் இழுத்தாள். பின்பு அவன் பெண்களினிடையில் பெண் வடிவிலும், ஆண்கள் இடையில் ஆண் வடிவிலும் இருந்தான். மற்றக் கடவுளர்களைப் போல, இந்திரன் குணங்களில் மாத்திர மல்லாமல், வடிவிலும் மனிதனைப் போலவே இருந்தான். சௌத்திராமணி என்னும் கிரியையில் அவன் வடிவம் செய்து வைக்கப்படுகின்றது.
உருத்திரன்
ஆரியருடைய புயற்கடவுள், பிற்காலத்தில் உருத்திரன் என்னும் பெயரைப் பெற்றது. உருத்திரன் பிற்காலத்தில் சிவனைக் குறிப்பதாகக் கொள்ளப்பட்டு, உருத்திர சிவன் என்னும் பெயரைப் பெறுவதாயிற்று. ஆரியர், இந்திய நாட்டை அடைந்தபின் பழங்குடிகள் வழிபட்ட தெய்வங்கள் பலவற்றைத் தமது கடவுளர்களோடு சேர்த்துக் கொள்வாராயினர். பழைய ஆரியக் கூட்டத்தினின்றும் பிரிந்து சென்று ஆங்காங்கு குடியேறியுள்ள மற்றைய ஆரிய மக்களுக்கு அறியப்படாதிருந்தனவும் இந்திய ஆரியரால் வழிபட்டனவுமாகிய கடவுளரை அவர்கள் இந்திய நாட்டினின்றும் பெற்றார்க ளாதலால் துணியப்படுகின்றது.
அவ்வாறு பெற்ற கடவுளரில் சிவன் கடவுள் ஒருவர். சிவன் என்பதற்குச் சிவந்தவன் என்பது பொருள். சிவன் என்பதே சிவந்தவன் என மொழி பெயர்க்கப்பட்டு ஆரிய வேதங்களில் வழங்கப்படுவதாயிற்று. சிவனை ஒத்த கடவுளை மற்றைய ஆரிய மக்கள் அறியாதிருந்தனர். சிவன் என்பதற்கு இந்து ஐரோப்பிய ஆரிய மொழிகளில் உற்பத்தி காண முடியவில்லை. உருத்திரன் ஆரியரின் கடவுளல்லர் என, மேல் நாட்டுக் கீழ்நாட்டு ஆராய்ச்சி வல்லார் ஆராய்ந்து கூறியுள்ளார்கள்.
வருணன், உருத்திரன், துவஷ்டா, அதிதி முதலிய கடவுளரைத் திராவிட மொழி வழங்கும் மக்களிடமிருந்து ஆரிய மக்கள் பெற்றுக் கொண்டனர். திராவிட மொழி, வேத மொழியைப் பெரிதும் மாற்ற மடையச் செய்ததெனக் காட்டியுள்ளோம். இதனை ஒப்பதேவ ஆதிக்குடிகள் வழிபட்ட கடவுளரின் பெயர்கள், ஆரியச்சொல் வடிவங்களை அடைந்து வேதகாலத் தெய்வங்களோடு இடம் பெற்றன. அக் கடவுளரின் பெயர்களுக்கு நேரானவை இந்து செர்மனிய மொழிகளில் காணப்படவில்லை; அவ்வகையான பெயர்கள் இந்தியப் பெயர்கள் என்றே கொள்ளுதல் தகுதியுடையது.” இவ்வாறு மந்திரகாலம் என்னும் நூலிற் காணப்படுகின்றது.1
மேற்கண்ட நூலில் உருத்திரனைக் குறித்துக் கூறியிருப்பது வருமாறு.
“உருத்திரன் திராவிட மொழி வழங்கும் மக்களின் இன்னொரு கடவுளாகத் தெரிகின்றது. அவர் மலைத் தெய்வமாகக் காணப்படுகிறார். அவருக்குப் பின்னிய சடை உண்டு; நிறம் கபிலம் (மங்கிய சிவப்பு); உடை தோல்;….. இவ்வகையான கடவுள் இமயமலை, அல்லது விந்தியமலை இடங்களில் வாழ்ந்த மக்கள் இடையேதான், தோன்றி வளர்ச்சியடைந் திருத்தல் கூடும்; சமவெளிகளில் வாழ்ந்த இருடிகளிடமன்று. உருத்திரன் என்பதற்குச் சிவந்தவன் என்பது பொருள். இது சிவன் என்னும் தமிழ்ப் பெயரின் மொழி பெயர்ப்பாகக் காணப்படுகின்றது. துவஷ்டா கைத் தொழிலாளரின் கடவுள். இக் கடவுளின் இடத்தை இந்திரன் எடுத்துள் ளான். அதிதி என்னும் சொல்லின் உற்பத்தி முற்காலத் தற்கால ஆராய்ச்சியாளருக்கு மயக்கத்தை உண்டு பண்ணிற்று. அப் பெயரின் மூலம், கண்டு பிடிக்கப்பட வில்லை. விஷ்ணு என்னும் பெயர் விண் என்னும் தமிழ் அடியாகப் பிறந்த தாகலாம். சிவன், விஷ்ணு, அம்மன், என்போர் இன்று இந்திய மக்களின் சிறந்த கடவுளராவர். இருடிகளுக்கு இவர்கள் சிறு தெய்வங்களாகக் காணப் பட்டனர்; இருடிகள் விருப்பக் குறைவோடு இவர்களைத் தமது தெய்வங் களோடு சேர்த்தார்கள்; ஆனால் மக்கள் அக்கடவுளரை வணங்கினர்; அதனால் அவை பெரிய தெய்வங்களாயின.
ஆரியரின் வருணன் என்னும் கடவுட்பெயர், விரி என்னும் அடி யாகப் பிறந்ததெனக் கூறுவர் கோவின் என்னும் ஆசிரியர்.1
பசு இறைச்சி குதிரை இறைச்சிகள் ஆரியருக்கு விலக்கு இல்லை
வேதகால ஆரியர் இறைச்சி வகைகளைத் தாராளமாகப் புசித் தார்கள். அவர்களின் உணவில் இறைச்சி வகையே முதன்மையாயிருந்த தென்பதைப் பற்றி ஒருவரும் ஆச்சரியமுற வேண்டியதில்லை. வெள்ளாடு, செம்மறியாடு, பசுக்கள், எருமைகள் யாகங்களிற் கொல்லப்பட்டன. அக்கினி, பசுக்களைப் புசிப்பவன் என்று வேதம் கூறுகின்றது. பாரத்துவாசர் தமக்கு உணவு வேண்டு மென்று இந்திரனைத் துதித்தார். அவன் உணவில் பசு முதன்மையுடையது. முக்கியமான விருந்து வந்தால், பெரிய மாடு அல்லது பெரிய ஆட்டைக் கொல்லும்படி சதபதப் பிரமாணங் கூறுகின்றது. அரசன் அல்லது பெருமகன் ஒருவன் விருந்தாக வந்தால், பெரிய எருதை அல்லது மலட்டுப் பசுவைக் கொல்லவேண்டுமெனவும் அந்நூல் கூறியுள்ளது.
இந்திரனுக்கு எருதுகள் பலியிடப்பட்டன. சமைக்கப்பட்ட மாட்டு இறைச்சியில் இந்திரனுக்கு மகிழ்ச்சி உண்டு. எருமைகளும் அவனுக்குப் பலியிடப்பட்டன. அவைகளின் இறைச்சியைச் சமைத்து இந்திரனுக்குப் படைத்தபின், வழிபடுவோர் அதனை உண்டனர். சில சமயங்களில் முந்நூறு எருமைகளுக்குமேல் பலியிடப்பட்டன. ஒருவர் இறந்தால் உடலைக் கொளுத்துவதன் முன் பசுவைக் கொன்று அதன் இறைச்சியால் அது மூடப் பட்டது. குதிரைகளும் யாகத்திற்குக் கொல்லப்பட்டன. அதன் இறைச்சியை வறுத்தும் அவித்தும் கடவுளுக்குப் படைத்தபின், அடியவர் அதனை உண்டு சோம இரசத்தையும் பருகினர். இறைச்சியை விற்பனை செய்யும் கடைகளும் இருந்தன. பாரதம், நாளொன்றுக்கு 2000 பசுக்களைக் கொன்று பலருக்கு விருந்து அளித்து வந்த இரந்தி தேவரைப் பற்றிக் கூறுகின்றது! புத்தர் தோன்றித் கொல்லாமையைக் கடியும் வரையில் ஊன் உணவு கொள்ளும் வழக்கு, வடநாட்டவர் எல்லோரிடையும் இருந்து வந்தது. வேதகால ஆரியர், மாட்டு மாமிசம் உண்ணுதல் இழிவு என்று கருதவில்லை. இருக்கு வேத காலத் தின் கடைப்பகுதியில் பசு, எருதுகளைப் பலியிடுவதைப் பற்றி வெறுப்பு உண்டாயிருந்தது.
ஆரியர் இவ்வாறு செய்யும் யாகங்களுக்கு அசுரர் எதிராக இருந்து வந்தனர். அவர்கள் அவ்வகை யாகங்களை வலிமையால் தடை செய்ய முயன்று வந்தார்கள். யூபத்தில் மிருகங்கள் கட்டப்பட்டதும், அசுரர் அதனை நோக்கி வந்தார்கள். ஆரியர் யாகச்சாலையைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக மதில்போல நெருப்பை வளர்த்து, அசுரரை அணுக முடியாமற் செய்தனர். இராவணனாதியோரும், ஆரிய முனிவர்கள் செய்யும் யாகங்களை அழித்து வந்தார்கள் என இராமாயணத்திற் படிக்கிறோம்.
கிருட்டிணர்கள்
வேத காலத்தில் இந்திரனுக்குப் பகைவராகிய கிருட்டிணர்கள் இருந்தார்கள். கிருட்டிணர் என்பது ஒரு மக்கட் கூட்டத்தினருக்குப் பெயராக விருந்தது. இக் கூட்டத்தினரிடையே தேவகியின் புதல்வனான கண்ணன் தோன்றியிருத்தல் கூடும். கிருட்டிணர்களுக்குத் தலைவனான கிருட்டிணன் அம்சுமதி (யமுனை) ஆற்றங்கரையில் பத்தாயிரம் வீரருடன் இருந்தான் என்று இருக்கு வேதம் கூறுகின்றது. ஆரியருக்காக, இந்திரன் கிருட்டிண ராகிய பகைவரை அழித்தான். இந்திரன் 50,000 கிருட்டிணரைக் கொன்றான் என்று வேதம் கூறுகின்றது. கிருட்டிண இந்திரரின் போர்கள், வேதகாலத்தில் தமிழருக்கும் ஆரியருக்கும் நிகழ்ந்த போர்களைக் குறிப்பிடுகின்றன.
தாசுக்கள்
தாசுக்கள் ஆரியரின் விரோதிகள் என்றும், அவர்களுக்கும் ஆரியருக்கும் போர்கள் நிகழ்ந்தன வென்றும் வேதங்களைக் கொண்டு அறிகின்றோம். தாசுக்கள் கறுப்பு நிறத்தினர் எனப்படுகின்றனர். இவர்கள் ஆரியரின் கடவுளரை வழிபட்டிலர். தாசுக்கள் என ஆரியராற் கூறப்பட் டோர் இந்தியப் பூர்வ மக்களே என ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்கள். தாசுக் கள் பட்டினங்களில் வாழ்ந்தார்கள். அவர்களுள் பல அரசர்கள் இருந்தார்கள். அவர்களிடத்தில் திரண்ட செல்வம் இருந்தது. பசுக்கள், குதிரைகள், தேர்கள் முதலியவை அவர்களின் செல்வங்கள். நூறு கதவுகளுள்ள நகர்களுள் வைத்துக் காக்கப்பட்டன. இந்திரன் அவைகளைக் கவர்ந்து, தன்னை வழிபடு வோராகிய ஆரியருக்குக் கொடுத்தான். தாசுக்கள் மிகவும் செல்வம் உடைய வர்களாகவும் சமவெளிகளிலும், மலைகளிலும் நிலம் உடையவர்களாகவும் இருந்தனர். அவர்கள் பொன் அணிகளை அணிந்தனர். அவர்களுக்குப் பல கோட்டைகள் இருந்தன. தாசுக்கள் பொன் வெள்ளி இரும்பு முதலியவை களாலமைத்த கோட்டைகளில் வாழ்ந்தார்கள். இந்திரன் தேவதாசர்களாகிய ஆரியருக்காகத் தாசுக்களின் நூறு கற்கோட்டைகளை அழித்தான். அக்கினி அவனுக்குத் துணையாகத் தாசுக்களின் பட்டினங்களை எரித்தான். ஆரியரிடமிருந்து கவர்ந்த மாடுகளை வைத்திருந்த மறியற் கூடங்களைப் பிரகஸ்பதி உடைத்தெறிந்தார். தாசுக்கள் போரில் தேர்களைப் பயன்படுத்தி னர். தாசுக்கள் ஆரியர் யாகங்களை அழித்து, ஆரியரின் தெய்வங்களுக்காக வைக்கப்பட்டிருந்த மதுவைப் பருகினார்கள்.
பாணியர் (PANIS)
பாணியர் என்னும் ஒரு வகுப்பினரைப் பற்றியும் வேதங்கள் கூறுகின் றன. பாணியர் என்போர் வணிகராகிய திராவிட மக்கள் எனப் படுகின்றனர். தாசுக்களை ஒப்ப, இவர்களும் ஆரியரின் பகைவராயிருந்தனர். பாணியர் எனப்பட்ட மக்களே மத்தியதரைக் கடலின் மேற்குக் கரை ஓரங்களிற் குடி யேறிப் பினீசியர் என்னும் பெயர் பெற்றனர் எனச் சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். பினீசியரின் எழுத்து மொகஞ்சதரோ எழுத்துக்களின் திரிபாகிய பிராமி எழுத்துக்களினின்றும் பிறந்தது என்று ஆராய்ச்சியாளர் கண்டுள்ளார்கள்.
பிராமணங்கள்
வேதங்களிலுள்ள பாடல்கள் மந்திரங்கள் எனப்படும், மந்திரங் களாகிய பாடல்கள் செய்யப்பட்டதன் பின்பு, கிரியைகள் வளர்ந்தன. ஆகவே மந்திரங்கள் கிரியைகளுக்கு ஏற்ற முறையில் பல தொகுப்புகளாகத் தொடுக் கப்பட்டன. அத்தொகுப்புகளுக்குச் சங்கிதை என்று பெயர். பிராமணங்கள் என்பன கிரியை முறைகளை விளக்கி எழுதப்பட்ட வசன பாகங்கள். இவை களும் வேதங்களுட் சேர்க்கப்பட்டுள்ளன. ஆகவே வேதங்களில் மந்திரம் பிராமணம் என இரு பகுதிகள் உள்ளன. ஐரோப்பிய நாடுகளிற் சென்று குடியேறிய ஆரியர்களுக்கு வேதங்களும், மந்திரங்களும், பிராமணங்களும் இல்லை. இந்திய நாட்டுக்கு வந்த ஆரியருக்கு இவைகள் இருக்க வேண்டிய காரணம், அவர்கள் இந்தியாவில் வாழ்ந்த பூர்வ மக்களிடத்திற் காணப் பட்டன போன்றவற்றைத் தாமும் பின்பற்றிச் செய்து கொண்டமையினாலே யாகும்.
“நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகு மறிவு (குறள். 452)
பிராமணக்கிரியை முறைகள், திராவிட மக்களின் ஆகமக்கிரியை களைப் பின்பற்றிச் செய்யப்பட்டனவென்பது ஆராய்ச்சி வல்லார் கருத்து.1
1“ஆரியர் சுற்லெச் என்னும் ஆற்றைக் கடப்பதன் முன் அவர்களின் சமயம் பூர்வமகள் கொள்கைகளோடு கலக்கவில்லை என்பது உண்மையே. பிற்காலச் சம்கிதைகளையும் பிராமணங்களையும் குறித்து. அவ்வாறு கூற முடியாது.” ஜி.ஆர். ஹன்ரர்.
பிராமணங்களைப் பயின்ற சிலர், அரசருக்கும் செல்வருக்கும் புரோகிதராயிருந்து யாகங்களை நடத்தினர். வேதபாடல்களை நோக்கும் போது அவை யாகங்களுக்காகவே செய்யப்பட்டனவாகத் தெரிகின்றது. யாகங்களைப் புரோகிதராக இருந்து செய்யும் மக்களே வேதங்களைப் பயின் றனர்; பின்பு அத்தொழில் பரம்பரைத் தொழிலாக மாறியதால், அவர்கள் ஒரு சாதியாராகப் பெருகினர். அவர்களே பிராமணராவார். அவர்கள் மறு பிறப்பைப்பற்றி அறிந்திருக்கவில்லை. ஆகவே அதனை அடிப்படையாகக் கொண்ட தத்துவ அறிவும் அவருக்குத் தெரியாதிருந்தது.1
ஆரணியங்கள்
பிராமணங்கள் தோன்றியபின் ஆரணியங்கள் தோன்றின. ஆரணி யங்கள் என்பவை, பிராமணர் காட்டில் வாசம் செய்யும்போது படிக்க வேண்டி யவை. பிராமணங்களில் காணப்படும் கிரியைகளும் இன்னொருவகையான கருத்துக் கொடுக்கும் பொருட்டு இவை தொடக்கத்தில் எழுந்தவையாகத் தெரிகின்றன. பிரிண்ட ஆரணியத்தில் காணப்படும் ஒன்றை இங்கு எடுத்துக் காட்டாகத் தருகின்றோம்.2
ஓம், விடியற்காலம் யாகக் குதிரையின் தலை; சூரியன் அதன் கண்; வாயு அதன் மூச்சு; அதன் வாய் எங்கும் நிறைந்த நெருப்பு; ஆண்டுகள் அதன் உடல்; வானம் முதுகு; வெளி வயிறு; பூமி பாதங்கள்; துருவங்கள் இடுப்புக்கள்; அதன் இடையேயுள்ளவை விலாக்கள்; பருவகாலங்கள் உள்-உறுப்புகள்; மாதமும் அதன் பக்கங்களும் மூட்டுக்கள்; இரவும் பகலும் கால்கள்; நட்சத்திரங்கள் எலும்புகள்; முகில்கள், தசை; பாலைவனங்கள் உணவு; ஆறுகள், குடர்; மலைகள், பித்தப்பையும் மூச்சுப்பையும்; பூண்டு களும் மரங்களும், மயிர்கள்; உதயமாகும் ஞாயிறு முன்பக்கம்; படும் ஞாயிறு பின்பக்கம்; அதன் கொட்டாவி மின்னல்; கனைப்பு இடி; மூத்திரம் மழை; சத்தம் பேச்சு; பகல் யாகப் பாத்திரம்போல் எழுந்து முன்னே நிற்கின்றது, அதன் பிறப்பிடம் கீழ்க்கடல்; இரா யாகபாத்திரம்; அதன் பிறப்பிடம் மேல் கடல்; இராப்பகல் என்னும் யாகப்பாத்திரங்கள் குதிரையைச் சூழ்ந்துள்ளன; பந்தயக் குதிரையைப் போல அது தேவரைக் கொண்டு செல்கின்றது; போர்க் குதிரையைப் போலக் கந்தருவரைக் கொண்டு போகிறது; வேகமான குதிரையைப் போல இராக்கதரைக் கொண்டு போகின்றது. சாதாரண குதிரையைப் போன்று மனிதரைக் கொண்டு செல்கின்றது. கடல் அதன் நண்பன். அது அதற்குப் பிறப்பிடம்.
பிராமணங்களில் கூறப்படும் கிரியைகளால் பயனில்லை எனக் கண்ட பிராமணர், ஆரணியங்கள் மூலம் பிராமணக் கிரியைகளுக்கு வேறு பொருள் கற்பிப்பாராயினர். இதனால் அவை பிராமணங்களுக்கு மாறுபட்டனவா யிருந்தன.1 ஆரணியங்கள் தோன்றிய பின்பு உபநிடதங்கள் எழுந்தன. இருக்கு வேத காலத்தில் காட்டில் சென்று தவஞ் செய்தலாகிய வழக்கு ஆரியருக்கிடையில் காணப்படவில்லையெனத் தத்தர் கூறுகின்றார். இவ் வழக்கம் ஆதிக்குடிகளிடத்திற் காணப்பட்டிருக்கலாம் அதனைப் பின் பற்றியே ஆரியப் பிராமணரும் முதுமைக் காலத்தில் காட்டில் சென்று தவஞ் செய்தாராகலாம். முதுமையில் தனிமையிலிருந்து தவஞ் செய்தல் தமிழர் வழக்கு எனத் தொல்காப்பியங் கூறுகின்றது. ஆரிய இருடிகள் காட்டிலிருந்து ஏதோ மந்திர வித்தை போன்றவைகளைப் புரிந்து அரசரையும் பொது மக்களையும் தமக்கு அஞ்சும்படி செய்தனர். இருடி, முனிவரைப் கண்டால் அரசரும் பிறரும் சாபங்களுக்கு அஞ்சி அவர்கள் வேண்டுவன புரிந்தார்கள் எனப் புராணங்கள் கூறுதல் காண்க. தென்னாட்டு முனிவர் வடநாட்டு முனிவர் போன்றவர்களல்லர் என்றும், அவர்கள் யாருக்கும் அஞ்சுவதில்லை என்றும், அவர்களைக் கண்டு எவருமஞ்சுவதுமில்லை என்றும், விண்டர் நிற்ச் (Winternitz) என்னும் செர்மன் ஆசிரியர் கூறுவர்.
உபநிடதங்கள்
உபநிடதங்களே தமிழர்களின் மறை. உபநிடதங்களிற் கூறப்படும் ஞானங்கள் ஏட்டில் எழுதப்பட்டிருக்கவில்லை. அவை குரு-மாணாக்கர் முறையில் தலைமுறையாக வந்தது. உபநிடதப் பொருள்களைப் பிராமணர் அறிந்திருக்கவில்லை. உண்மை ஞானத்தைத் தேடி அலைந்து திரிந்த பிராமணர் அரச வகுப்பினர் பாதங்களில் மாணாக்கராக இருந்து உபநிடத ஞானங்களைக் கற்றனர்.2 தாம் கற்றறிந்த பொருள்களை அவர்கள் நூல் களாகச் செய்து அவைகளுக்கு உபநிடதம் எனப் பெயரிட்டனர். உப நிடதம் என்பதற்குக் கிட்ட இருந்து கேட்கப்படுவது என்று பொருள். இரகசியம் எனவும் அது வழங்கும். உபநிடதங்கள், உயிர், உலகம், கடவுள் என்னும் முப்பொருள்களைப் பற்றி ஆராயும் நூல்கள். உபநிடதங்கள் பிராமணங்கள் ஆரணியங்களை ஒப்ப வேதங்களோடு சேர்க்கப்பட்டது. உபநிடதங்களுக்கு வேத முடிவு என்பது பொருள். வேதங்களைப் பிராமணன் ஆசானாயிருந்து மற்ற உயர்ந்த வருணத்தவர்களுக்குக் கற்பிக்கலாம். பெண்களும் சூத்திரரும் வேதங்களைப் படிக்கவும் கேட்கவும் ஆகாது. உபநிடத ஞானங்களின் அரச வகுப்பினரும், பிறரும், பெண்களும் திறமையுடையவர்களாயிருந்தனர். ஆராய்ச்சியாளர் உபநிடதங்கள் தமிழருடையதே என முடிவு செய்துள் ளார்கள். உபநிடத ஞானமே புத்த, சைன மதங்களுக்கும் சாங்கியம் முதலிய வைகளுக்கும் அடிப்படை. அக்பர் காலத்தில் ‘அல்லா உபநிடதம்’ என ஒரு உபநிடதமும் செய்யப்பட்டது. காலந்தோறும் பல உபநிடதங்கள் எழுதப் பட்டன.
புராணங்கள்
புராணங்கள் என்பன கோயிற் பூசகராலும், பிராமணராலும் பொது மக்களின் அறிவை மழுக்கித் தாம் நல்வாழ்வு அடையும்படி எழுதி வைக்கப்பட்ட பொல்லாத பொய் நூல்கள். இதனைப் பற்றி அதிகம் கூற வில்லை. எடுத்துக்காட்டாக இங்கு ஒன்று தருகின்றோம். இது மச்சபுராணத் தில் சிவன் கூறியதாகச் சொல்லப்படுகின்றது.
“இராக்கதர், அசுரர், தைத்தியர் தானவர் ஒரு புறமும், தேவர் ஒருபுறமு மாக நின்று பொருதபோரில் ஆயிரக்கணக்கான தானவர் அசுரர் முதலியோர் மாண்டனர். இந்திரன், தானவர் ஆகியோரின் மனைவியரை நோக்கிப் பின்வருமாறு கூறுகின்றான். நீங்கள் அரசரையும் உங்கள் எசமானரையும் சூத்திரரையும் ஒரே வகையாகக் கருதி ஒழுகவேண்டும். அப்பொழுதுதான் உங்களுக்குச் செல்வம் உண்டாகும். வறிய ஆடவராயினும் போதுமான பொருள் கொண்டுவந்தால் அவர்களுடன் கூடிக் குலாவவேண்டும்; கெம்பீர மாக வருபவர்களுக்குப் போகம் கொடுத்தல் ஆகாது, நீங்கள் பிதிர்களையும் தேவர்களையும் வழிபடும்போது பொன், தானியம், பசு, நிலம் முதலியவை களைப் பிராமணருக்குத் தானமாகக் கொடுக்கவேண்டும். பிராமணர் சொல்வது போல எல்லோரும் கேட் டொழுக வேண்டும். நீங்கள் கடைத்தேற வேண்டுமாயின், கட்டாயமாக ஒழுகவேண்டிய சில விதிகளைக் கூறுகின் றேன். நீங்கள் வாழ்க்கையின் துன்பக் கடலைத் தாண்டுவதற்கு வேதங்களைக் கற்றறிந்தவர் வகுத்துள்ள சட்டம் வருமாறு: பெண்களாகிய நீவிர் ஞாயிற்று வாரத்தில் இலை குழை அவித்த நீரில் நீராடவேண்டும். பின்பு வேதாந்தம் அறிந்த கட்டழகனாகிய பிராமணனைச் சந்தனம், பூ, வாசப்புகை என்பவை களை வைத்து வழிபட வேண்டும். பின்பு சில பிராமணருக்குப் பச்சை அரிசி யும், முட்டி நிறைந்த வெண்ணெயும் கொடுக்க வேண்டும். முன் கூறிய வேதாந்தமறிந்த பிராமணனுக்கு நல்ல விருந்து இட்டு, அவனைக் காமனாகக் கருதி வழிபடவேண்டும். அப்பிராமணனுக்குப் போகத்தில் எப்படி இச்சையோ, அப்படியெல்லாம் புன்முறுவலோடு அவனைத் திருப்தி பண்ண வேண்டும். இவ்விரதம் பிடிப்பவள் பதின்மூன்று மாதம் பிராமணருக்குப் பச்சையரிசியும், முட்டிநிறைந்த வெண்ணெயும் கொடுத்து வரவேண்டும். அக்கால முடிவில் அவனுக்கு மெத்தை தலையணை, படுக்கைக்கு விரிக்கும் துப்பட்டி, விளக்கு, மிதியடி, செருப்பு, இருப்பதற்குப் பாய் முதலியவை களைத் தானமாக வழங்க வேண்டும்.
பின்பு பிராமணனையும் அவன் மனைவியையும் அழைத்துப் பொன்நூல், மோதிரம், பட்டாடை, பொன் வளை, பூமாலை, சந்தனம் முதலிய வைகளைக் கொடுத்து அவர்களைக் கனம்பண்ணி வழிபட வேண்டும். பின்பு தங்கத்தினால் கண்வைத்த காமன், இரதி என்னும் பாவைகளைத் தட்டத்தில் வைத்து, இனிப்புப் பண்டங்கள், பால் மாடு, வெண்கலப் பாத்திரம், கருப்பங் கழி, என்பவைகளை வைத்துக் கொடுக்க வேண்டும். அப்போது விட்டுணு மகிழ்ந்து வேண்டியவைகளைக் கொடுப்பார்.
பின்பு அவனைச் சுற்றி வந்து கும்பிட்டு அவனை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். படுக்கை முதலியவைகளை அவன் வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதுமுதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் கூடிச் சுகம் அனுபவிக்க வரும் பிராமணனை மரியாதை செய்து கனம் பண்ண வேண்டும். இப்படிப் பதின் மூன்று மாதங்களுக்கு அவனை திருப்தி பண்ணவேண்டும். அந்தப் பிராமணனுடைய விருப்பத்தின்பேரில் இன்னொருவன் வந்தால் ஐம்பத் தெட்டு லீலைகளாலும் அவனை மகிழ்விக்க வேண்டும்.
வியபிசாரிகளுக்குப் பாவம் உண்டாக மாட்டாத அரிய விரதத்தைப் பற்றி உங்களுக்குச் சொன்னேன். இதனை இந்திரன் தானவர்களின் மனைவி யருக்குச் சொன்னான் (என்று சிவன் சொன்னார்). ஒ அழகிய பெண்களே! இவ்விரதம் பாவங்களை ஒட்டிப் பல நன்மைகளைத் தரவல்லது. நீங்கள் நான் சொன்ன வண்ணம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்.
அமாவாசையின் பின் ஆறாவது நாள் பிடிக்கும் விரதத்தில் பிராமணரைப் பக்தியோடு வழிபட வேண்டும், வழிபடுகிறவன் படுக்கைக்குப் போகுமுன் பசு மூத்திரங் குடிக்க வேண்டும். காலையில் எழுந்து குளித்துத் தோய்ந்தபின் பிராமணருக்கு விருந்திட வேண்டும். பின்பு அவர்களுக்குப் பொன்னாற் செய்த தாமரைப் பூ கொடுக்க வேண்டும். அதோடு ஒரு சிவப்புப் பட்டாடையும் தானம் பண்ண வேண்டும்.1 - மச்ச புராணம்.
இவ்வகையான விரதத்தை எவர் முன்னிலையிலாவது ஒருவர் இன்று சொன்னால், அவர் தண்டனையடையாமல் தப்பி வருவது அரிது. இவ் வகை நீதியையும் விரதத்தையும் கடவுள் சொன்னார் எனக் கூறும் நூலைப் பற்றி நாம் கூறுவதற்கு ஒன்றுமில்லை.
கணவனிறந்த பெண்களை உயிரோடு கொளுத்தும்படி கூறும் வேத மதம்
இறந்தவர்களோடு அவர்கள் பயன்படுத்திய பொருள்கள், அடிமைகள், நாய்கள், குதிரைகளையும் உடன் வைத்துப் புதைத்தல் அல்லது கொளுத்த லாகிய வழக்கு இவ்வுலக மக்கள் பலரிடையில் காணப்பட்டது. இதற்குக் காரணம், அக்கால மக்கள் இறந்தவர்களின் மறு உலகத்துணைக்கு அப் பொருள்களும், பிறவும் பயன்படும் என்று கருதினமையாகும். மக்கள் அறிவு வளர்ச்சியடைத்த காலத்தில், பெண்கள் சிலர் கணவர் இறந்தபோது தீயில் பாய்ந்து தற்கொலை புரிந்து கொண்டார்கள். அவர்கள் தற்கொலை செய்ய வேண்டும் என்னும் கட்டாயம் இருக்கவில்லை. கிரியைகளையே தமது வாழ்க்கைப் பிழைப்பாகக் கொண்டிருந்த பிராமணர், கணவர் இறந்தபோது பெண்கள் சிலர் தற்கொலை புரியவதை வாய்ப்பாகக் கொண்டு, அவ்வாறு செய்வதற்குச் சில கிரியைகளை வகுத்துத் தமது சமய நூல்களிலும் அதனை வற்புறுத்தி எழுதிவைப்பாராயினர். அதனால் காலத்தில், கணவனை இழந்த பெண்கள், தற்கொலை புரிய வேண்டும் என்னும் கட்டாயம் உண்டாயிற்று. பெண்கள் தமது உயிருக்கஞ்சியும், தீயில் உயிரோடு வேகப்போகும் துன்பத் துக்குப் பயந்தும், கதறித் துடிக்கத் துடிக்க அவர்கள், வலிதில் பிடித்து இழுத்துக் கணவனின் பிரேதத்தோடு கிடத்தித் தீமூட்டிக் கொளுத்தப்பட் டார்கள். ஒருவனைக் கொலை செய்தால் இன்று ஆங்கில ஆட்சியில் என்ன தண்டனை விதிக்கப்படுகின்றதென எல்லோரும் அறிந்ததே. இக்கொடிய செயல்களை நேரில் பார்த்த மேல்நாட்டவர்கள் மிகவும் மனவேதனையோடு, பெண்களைப் பிராமணர் தீயிலிட்டுக் கொளுத்தும் கொடுமையைப் பற்றி எழுதியுள்ளார்கள். முதற்கண் ஆரிய நூல்களில் பெண்களைக் கொளுத்து வதற்கு அனுமதிக்கும் சட்டங்கள் சிலவற்றை இங்குத் தருகின்றோம்.
1சுருதி சங்கிரகம், என்பது பிராமணரின் சாத்திரங்களிலிருந்து திரட்டப் பட்ட சட்டங்கள். அந்நூலிலிருந்து 1799இல் விதவைகளைக் கணவனோடு உடன் கட்டை ஏற்றுவதற்கு அனுமதிக்கும் சட்டங்கள் தொகுக்கப்பட் டுள்ளன. அவற்றுட் சில பின் வருவன:
கணவன் இறந்த பின்பு அவனோடு நெருப்பில் எரிந்து இறக்கின்ற வள் சுவர்க்கத்தை அடைகின்றாள். கணவன் இறக்கும்போது அவள் ஒருநாள் வழிப்பயணத்துக்கு அப்பால் இருந்தால் பிரேதத்தை எரிக்காமல் ஒரு நாள் பொறுத்திருக்கலாம் - அங்கீரர்.
மனைவி கணவனோடு உடன்கட்டை ஏறினால், அல்லது தற்கொலை செய்துகொண்டால், அவளுடைய சுற்றத்தினர் மூன்று நாள் தீட்டுக் காக்க வேண்டும். அதன் பின்பு சிரார்த்தம் செய்ய வேண்டும். அவள் உடனே கணவனின் மரணத்தைப்பற்றி அறியாவிட்டாலும், உடன்கட்டை ஏறா விட்டாலும், தீட்டுக்குரிய நாள்கள் கழிந்த பின் நெருப்பில் விழுந்து இறந்து போகவேண்டும். அவள் அவ்வாறு தனியே இறந்தால் மூன்று நாட்கழித்து சிரார்த்த பிண்டம் போடவேண்டும் - இருக்கு வேதம்.
ஒருவன் வறியவனாக அல்லது பாவியாக இருந்த போதிலும் மனைவி உடன்கட்டை ஏறினால், அவளுடைய பாவங்கள் உடனே பறந்து போகும். மனைவி கருப்பமாக இருந்தாலும், குழந்தையுடைவளாயிருந்தாலும் அவள் கணவனுடன் இறக்கவேண்டியதில்லை. குழந்தையைப் பாதுகாப்பதற்கு வேறு யாரேனும் இருந்தால், அவள் உடனே உடன்கட்டை ஏறலாம். ஒருத்தி பிரேதத்தைக் கொளுத்தும் விறகின் மேல் ஏறிச் சாவுக்குப் பயந்து தப்பி ஓடினால், அவள் பிரசாபதியா என்னும் கடிய விரதம் பிடிக்க வேண்டும் - விட்டுணு புராணம்.
மனித உடலில் 35,000,000 மயிர்கள் உள்ளன. மனைவி கணவனோடு உடன்கட்டை ஏறினால், உடலில் எத்தனை மயிர் உள்ளனவோ, அவ்வளவு காலம் அவள் மோட்சத்தில் இருப்பாள். பாம்புப் பிடாரன் எப்படிப் பாம்பைப் புற்றிலிருந்து இழுத்தெடுக்கிறானோ, அப்படியே உடன்கட்டை ஏறிய பெண் கணவனை நரகத்திலிருந்து இழுத்தெடுக்கிறாள். அவள் தனது கணவ னுடைய குடும்பத்தினர், தாய், தந்தை முதலியவர்களைப் புனிதமடையும்படி செய்கிறாள். உத்தம பெண்ணுக்குக் கணவனோடு இறப்பதைவிடச் செய்யத் தக்க வேறு நல்ல செயல் யாதும் இல்லை. எல்லாப் பிறவிகளிலும் கணவ னோடு இறப்பவள் பெண் விலங்காகப் பிறக்கமாட்டாள் - அங்கீரர்.
கணவன் இன்னொரு தேசத்தில் இறந்தானானால் மனைவி, அவ னுடைய செருப்பை எடுத்து மார்போடு வைத்துக் கட்டிக்கொண்டு நெருப்பில் விழக்கடவள் - பிரம புராணம்
ஒருத்தி கணவனோடு உடன்கட்டை ஏறினால் அவள் மூன்றரைக் கோடி ஆண்டுகள் சுவர்க்கத்தில் இருப்பாள். அப்படி அவள் சாகா விட்டால் அவள் தனது கற்பைக் காக்க வேண்டும். அல்லாவிடில் அவள் நரகத்துக்குப் போவாள் - ஆரிய நீதி சாத்திர பண்டிதர்.
வில்லியம் யேம்ஸ் என்பவர் “விதவைகளைத் தீயிலிடுதல்” என்னும் நூலில் எழுதியிருப்பது வருமாறு:
“சில இடங்களில் கருப்பவதிகளும், பருவம் அடையாத பெண்களும் எரிக்கப்பட்டார்கள். அவர்கள் மயக்க மருந்து கொடுத்தபின், மயக்கத்தி லிருக்கும் போதே கட்டையில் வைத்துக் கொளுத்தப்பட்டார்கள். உடன் கட்டை ஏற்றும்போது அவள் எழுந்து ஓடிவிடாதபடி, பிராமணர் அவள் அரையிற் கயிறுமாட்டிக் கட்டி விடுகிறார்கள். தீக்கொளுத்தும்படி கூறினதும், உடனே பிராமணர் தீக்கொளுத்தி விடுகிறார்கள். பக்கத்தே நிற்பவர்கள் எல்லோரும் நெய்யை நெருப்பில் சொரிவார்கள். எரிந்து முடிந்தவுடன் பிராமணர் சாம்பலைக் கிளறிப் பெண் அணிந்திருந்த நகைகளைப் பொறுக்கி எடுத்துக் கொள்ளுவார்கள். அவை அவர்களுக்கே உரியது.” 1924-ல் மார்வாரில் இராசா அசிற்சிங் இறந்தபோது அறுபத்து நான்கு பெண்கள் கட்டையில் ஏறினார்கள். இராசா பட்சிங் நீரில் அமிழ்ந்தியபோது 84 பெண்கள் கட்டையில் ஏறினார்கள். 1611ஆம் 1620ஆம் மதுரை நாயக்கர் இறந்தபோது முறையே 400, 700 பெண்கள் கட்டை ஏறினார்கள். கட்டை கிடங்குக்குள் அடுக்கப்பட்டது. இவ்வாறு செய்வது உடன்கட்டை ஏற்றப் படும் பெண்கள் தப்பி ஓடாமல் இருப்பதற்காகும். கூர்ச்சரத்தில் 12 அடி சதுரமான கொட்டிலில், பிணம் கொளுத்தப்பட்டது. உடன்கட்டை ஏறும் பெண் கொட்டிற்கால் ஒன்றோடு கட்டப்பட்டாள். வங்காளத்தில் பெண்கள் தரையில் முளை அடித்துக் கட்டப்பட்டார்கள். சில சமயங்களில் உடன் கட்டை ஏற வரும் பெண்கள் முதுகு காட்டி ஓட்டம் எடுப்பதுமுண்டு அவ் வகையினர் தீண்டாதவர்களாகக் கருதப்பட்டனர். அவர்கள் குடும்பத்தில் மறுபடியும் அனுமதிக்கப்படமாட்டார்கள். இவ்வாறு ஓடும் பெண்களைக் bகாண்டு போவதற்குப் புலையர் கூட்டமாக வந்து நிற்பதுண்டு. சில ஐரோப்பிய வணிகர் அவ்வாறு ஓடுகின்றவரைக் காப்பாற்றி மணஞ்செய்து கொள்வ துண்டு. வில்லியம் பென்ரிக் என்பவர் இவ்வழக்கத்தைத் தடுக்கும் சட்டத்தை 1829-ல் வெளியிட்டார். 800 பிராமணர் இது சமயத்துக்கு மாறானது என்று சொல்லிக் கையெழுத்திட்டுப் பிரிவிக் கவுஞ்சிலுக்கு அப்பீல் செய்தார்கள். அவ்வப்பீல் 1832-ல் தள்ளப்பட்டது. பிராமணர் இவ்வழக்கத்தை வற்புறுத் தியது கணவனை இழந்த பிராமணப் பெண்களின் ஒழுக்கத்தைக் காப்பாற்ற முடியாமையால் ஆகும். 1கேட்டால் திடுக்கிடும் பல நிகழ்ச்சிகள் கூறப்பட் டுள்ளன. அவைகள் இச் சிறு நூலில் எழுத இடம்பெறா. இராசா ராம் மோகன் ராய் என்னும் அறிவாளி இப் பைத்தியக்காரத்தனத்தை ஒழிக்கப் பெரிது முயன்று வெற்றி பெற்றார். ஆங்கில அரசாங்கம் உடன்கட்டை ஏறுவதோ, ஏற்றுவதோ சட்டத்துக்கு மாறு என்று விளம்பரஞ் செய்தது.
பிராமணர் தமது சமயம் கெட்டுவிட்டது என்று துடித்துக் கதறினார்கள். ஆங்கில அரசாங்கம் செவிகொடுத்திலது. இன்று கைம்பெண்கள் உடன் கட்டை ஏறாமையால் ஒன்றும் முழுகிப்போகவில்லை. அரசாங்கத்தை எதிர்க்க வலியற்ற பிராமணக் குழாம் உடன்கட்டைக்குப் பதில் தலையை மொட்டை தட்ட வேண்டும் எனச் சட்டம் செய்தது. இக்கொடிய சட்டத்தையும் “கிரிமினல் குற்றாமாக”க் கொள்ளாமல் அரசினர் இருப்பது வியப்புக்குரியதே. மனித சமூகத்தைக் கெடுக்கும் செயல்கள் எல்லாம் “கிரிமினல்” குற்றங்களாகக் கொள்ளப்படுதல் தகுதியுடையதாகும்.
“வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக் கொரு நீதி” - மனோன்மணியம்.